உலகின் கண்கள் சிங்கப்பூரில் ! ட்ரம்ப் – கிம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு !! வெற்றிகரமாக முடிந்தது பேச்சுவார்த்தை ...
வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் தற்போது நடைபெறுகிறது. ட்ரம்ம், கிம் ஆகியோர் இந்தப் பேச்சு வார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையினால் ஒட்டுமொத்த உலகின் கண்களும் சிங்கப்பூரை நோக்கி குவிந்துள்ளன. கிம் - டிரம்ப் இடையே தற்போது நடைபெற்று வரும் இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் அது கொரிய தீபகற்பத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கும், மாற்றங்களுக்கும் வித்திடும் என சீனா தெரிவித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு அடிப்படையான முன் முயற்சிகளை மேற்கொண்ட மக்கள் சீன அரசு, பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்துள்ளது.
அணு ஆயுத பரவல் தடைக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இந்தப்பேச்சுவார்த்தை அமையும் என்றும், இப் பேச்சுவார்த்தையை எந்தவிதத்திலும் பின்னடைய செய்துவிடாமல் நடத்தியே தீர வேண்டும் என்பதில் மிகவும் ஒத்துழைப்பான, சாதகமான முன்மொழிவுகளை தந்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கு மக்கள்சீனம் பாராட்டும் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களின் பிடியிலிருந்து கொரிய தீபகற்பத்தை விடுவித்து அமைதியை நிலைநாட்ட ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாக இது அமையவேண்டும் எனவும் அவர் கூறினார்.
வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து அதிபர் கிம் ஜாங் உன், ‘ஏர் சீனா’ விமானத்தில் நேற்று முன் தினம் மதியம் சிங்கப்பூர் சென்றார். அதேபோல், டிரம்பும் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார். இதன்பின், சிங்கப்பூர் பிரதமர் லீ - ஐ இரு நாட்டு தலைவர்களும் தனித்தனியே சந்தித்தனர். இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட செய்தியாளர் கள் சிங்கப்பூரில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை சந்திப்பு நடைபெற உள்ள கேபெல்லா ஹோட்டலுக்கு இரு தலைவர்களும் பலத்த பாதுகாப்புடன் சென்றனர். சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு இன்று காலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு நடைபெற்றது. இரு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கைகளை குலுக்கி கொண்டனர். தொடர்ந்து 45 நிமிடங்கள் இந்தப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் சாராம்சம்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.