இலங்கை கடற்படையின் தலைவராக 40 ஆண்டுகளுக்கு பின், டிராவிஸ் சின்னையா என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டுப் போர் தொடங்கி 45 ஆண்டுகளுப்பின் சிறுபான்மை இனமான தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கடற்படை தலைவராக நியமிக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும்.

இது குறித்து அதிபர் மைத்திரிபால் சிறிசேனா டுவிட்டரில் விடுத்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது :

இலங்கை கடற்படையில் பல ஆண்டுகளாக மிகவும் நேர்மையாகவும், விசுவாசமாகவும் பணியாற்றியவர் டிராவிஸ் சின்னையா. அவர் கடற்படையின் தலைவராக நியமிக்கப்பட்டு பொறுப்பு ஏற்க உள்ளார். இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கம்  இடையே உள்நாட்டுப் போர் நடந்தபோது, விடுதலைப்புலிகளின் போர்க்கப்பலை தாக்கி அழித்தவர்களில் முக்கியமானவர் டிராவிஸ் சின்னையா என்று தெரிவித்துள்ளார்.

தற்போது துணை தலைவராக இருக்கும் ரவி விஜிகுணரத்னே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கடற்படை தலைவராக சின்னையாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 22-ந்தேதி அவர் பணியில் இணைகிறார்.

இதற்கு முன் கடந்த 1960களில் கடற்படை தலைவராக ராஜன் கதிர்காமர் என்ற தமிழர் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த 1972-ம் ஆண்டு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியபின் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்குபின், தமிழ் சமூகத்தில் இருந்து கடற்படை தலைவர் பதவிக்கு நியமிக்கப்படும் முதல் மனிதர் சின்னையா ஆவார்.

கடந்த 1982ம்ஆண்டு இலங்கை கடற்படையில் சின்னையாக சேர்ந்தார். விடுதலைப்புலிகளுடான இறுதிக்கட்ட போரில், 2007ம் ஆண்டு இந்தோனேசியா, ஆஸ்திரேலிய கடற்பகுதியில் விடுதலைப்புலிகளின் கடத்தல் கப்பல்களை தாக்கி அழித்தவர்களில் சின்னையா முக்கியமானவர். சின்னையாவின் இந்த சாதனை கடற்படையின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.