கரீபியன் தீவில் மையங்கொண்டுள்ள டொரியன் என்ற அதி சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவின் புளோரிடாவில் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த புயல் மணிக்கு 210 கிலோமிட்டர் வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலந்து நாட்டுப் பயணத்தை அதிபர் ட்ரம்ப்  ரத்து செய்துள்ளார்.

கரீபியன் தீவுகள் அருகே மையம் கொண்டிருந்த டொரியன் புயல் ,தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து, வந்து கொண்டிருக்கிறது. வருகிற திங்கட்கிழமை பிற்பகலில்  அது புளோரிடாவில் கரையை கடக்கும் என்று அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது  130 கிலோ மீட்டர் வேகம் முதல் அதிகபட்சமாக 210 கிலோ மீட்டர் வேகம்வரை அதிபயங்கர சூறாவளியாக வீசும் என்றும் ,  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உடனே எடுக்கவேண்டும் என்றும் அம்மையம் எச்சரித்துள்ளது. தற்போது அதிபயங்கரமான டொரியன் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.  

இதனால் புளோரிடாவில் உள்ள 26 மாவட்டங்களுக்கும்  புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு புயலால் பாதிக்க க் கூடிய இடங்களை கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே புளோரிடாவையொட்டியுள்ள ஜார்ஷியாவில் உள்ள ஒரு சில நகரங்களுக்கும் புயல் தாக்கம் இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அரசுமுறைப்பயணமாக போலந்து நாட்டிற்கு  செல்ல இருந்த ட்ரம்ப் டொரியன் புயலால் பயணத்தையே திடீரென ரத்து செய்துள்ள நிலையில். புளோரிடா மாநில ஆளுனரை தொலைபேசியில் அழைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்,  இராணுவத்தையும் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்களில் இறங்க தயாராக இருக்கவும் உத்தரவிட்டுள்ளார். டொரியனை தொடர்ந்து கண்கணித்து உடனுக்குடன் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் அவர் முக்கிய துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுவரை இல்லாத அளவிற்கு டொரியன் புயல்  அமெரிக்காவை புரட்டிப்போடப்போகிறது என்று அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.