லக்ஷர் இ தொய்பா தளபதி ஹஷிம் அலி அக்ரம் காசாவில் சுட்டுக் கொலை!
லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதி ஹஷிம் அலி அக்ரம் காசாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பாகிஸ்தானின் முன்னணி பயங்கரவாதியும், லக்ஷர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காசாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது, காசாவில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
லக்ஷர் இ தொய்பாவின் இணை நிறுவனரான ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஹஷிம் அலி அக்ரம் மறைவு அந்த பயங்கரவாத அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் அமைப்பினர் பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் நடத்தி வரும் நிலையில், ஹஷிம் அலி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர், கடந்த 7ஆம் தேதியன்று இஸ்ரேல்மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது எதிர்த் தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனால், போர் மூண்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
முந்தைய சண்டைகளை விட தற்போதைய தாக்குதல் இஸ்ரேலுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் முதல் நாளே 5000 ஏவுகணைகளை கொண்டு தாக்கினர். இதனை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல் உருக்குலைந்தது. எப்படியேனும் ஹமாஸை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவோடு இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை கையாண்டு வருகிறது. இதில் சிக்கி பாலஸ்தீனத்தின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இஸ்ரேலில் 1300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காசாவில் உயிரிழப்பு 4000ஐத் தாண்டி அதிகரித்து வருகிறது.