சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை பலி கொண்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் வெறியாட்டம் ஆடிவரும் இந்த வைரஸிடம் இருந்து மக்களை காப்பதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் வரை இத்தாலி மற்றும் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது. 

கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடான இத்தாலியில் இந்த மாதம் தான் உயிரிழப்பும், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இத்தாலியில்  இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 997 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 ஆயிரத்து 415 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது இத்தாலியில் பாதிப்புகள் குறைந்துள்ள போதும், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் லோம்பாடி அடுத்த மிலனில் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சான் ரஃபேல் என்ற மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்க்ரிலோ என்பவர், மருத்துவ ரீதியாக சொல்ல வேண்டும் என்றால் கொரோனா வைரஸ் இத்தாலியில் இல்லை என்றும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு நோயாளிகளின் ஆடையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கணக்கிட முடியாத அளவிற்கு நோய் கிருமிகள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று மறைந்துவிட்டது என்ற ஆய்வறிக்கையை ஆதரிக்க அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பலவீனமடைந்து வருவதாக ஜெனோவா சான் மார்டினோ மருத்துவமனை தொற்று நோய்கள் பிரிவு தலைவர் மேட்டியோ பாசெட்டி தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்த கொரோனாவின் பலமும், இன்று இருக்கும் கொரோனாவின் பலமும் ஒன்றாக இல்லை என்றும், இதன் மூலம் இன்றிருக்கும் கொரோனா தொற்று வித்தியாசமானது என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.