புதிய போப் ஆண்டவர் லியோ தனது முதல் கிறிஸ்துமஸ் உரையில், காசா மக்களின் துயரங்கள் மற்றும் அகதிகளின் நிலை குறித்து உருக்கமாகப் பேசினார். போர்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும், மனிதநேயமே கடவுள் வசிக்கும் இடம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக கடந்த மே மாதம் பதவியேற்ற போப் ஆண்டவர் லியோ (Pope Leo XIV), தனது முதல் கிறிஸ்துமஸ் உரையில் காசா மக்களின் துயரங்களையும், அகதிகளின் நிலையையும் சுட்டிக்காட்டி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாடிகனில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது. இதில் சுமார் 6,000 பேர் நேரில் கலந்து கொண்டனர். தேவாலயத்திற்கு வெளியே கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் குடைகளைப் பிடித்தபடி திரைகளில் போப் ஆண்டவரின் உரையை நேரலையில் கண்டு களித்தனர்.
இந்தியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 10 குழந்தைகள் பூக்களை ஏந்திச் செல்ல, போப் ஆண்டவர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை நோக்கிச் சென்று சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
"கடவுளுக்கும் இடமில்லை"
தனது உரையில் போப் ஆண்டவர் லியோ காசா மக்களின் துயரத்தைக் குறிப்பிட்டு உருக்கமாகப் பேசினார். "வாரக்கணக்காக மழை, காற்று மற்றும் கடும் குளிரில் தவித்து வரும் காசா மக்களை நாம் எப்படி நினைக்காமல் இருக்க முடியும்? கூடாரங்களில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் நம் நகரங்களில் வீடின்றி வாடும் ஆயிரக்கணக்கான மக்களின் வலியை நாம் உணர வேண்டும்." என்றார்
“உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ மறுப்பது கடவுளையே நிராகரிப்பதற்குச் சமம். எங்கு மனிதநேயத்திற்கு இடம் இருக்கிறதோ, அங்குதான் கடவுள் வசிக்கிறார். ஒரு மாட்டுக்கொட்டகைகூட அன்பினால் புனிதமான கோவிலாக மாற முடியும். உலகில் நிலவும் போர்களும், பிரச்சனைகளும் முறையான பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே முடிவுக்கு வர வேண்டும். கிறிஸ்துமஸ் என்பது நம்பிக்கை மற்றும் அன்பின் திருவிழா” என போப் லியோ பேசினார்.
யார் இந்த போப் லியோ?
போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு, கடந்த மே 8-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் புதிய போப் ஆண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது ஆட்சிப் பெயராக '14-ம் லியோ' (Leo XIV) என்பதைத் தேர்வு செய்தார்.
அமெரிக்காவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ஆண்டவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. வறுமை, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து போப் லியோ தொடர்ந்து குரல் கொடுத்து வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


