அமெரிக்காவை மிரட்டும் கோடைப் புயல்... ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து... இருளில் மூழ்கிய நகரங்கள்
அமெரிக்காவில் வீசும் மிக மோசமான கோடைப் புயலால் பல ஆயிரம் விமானங்கள் புறப்படுவது தாமதமாகிறது. 1000க்கும் மேலான விமானங்கள் ரத்தாகின்றன.
அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வீசும் கடுமையான கோடைப் புயலால் 9,000க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஃப்லைட்அவேர் (FlightAware) நிறுவனம் கொடுத்த தகவலின்படி, திங்கட்கிழமை அமெரிக்காவில் 8,200 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. மேலும் 1,600 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 400 விமானங்களை ரத்து செய்துவிட்டது. அந்நிறுவனத்தின் பயண அட்டவணையில் 11 சதவீதம் விமானங்கள் ரத்தாகின. 1,200 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
"எங்கள் அட்லாண்டா மையத்தை பாதித்த கடுமையான வானிலை காரணமாக, விமான இயக்கத்தை மீண்டும் தொடர டெல்டா பணிக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. விமானங்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக எங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று டெல்டா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இடியுடன் கூடிய மழை காரணமாக நியூயார்க், பிலடெல்பியா மற்றும் வாஷிங்டன், டி.சி. ஏரியா விமான நிலையங்களை நோக்கிச் செல்லும் விமானங்கள் மெதுவாகச் செல்வதாக பெடரல் விமானப் போக்குவரத்துக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புயல் காரணமாக வடக்கு புளோரிடாவிலிருந்து நியூயார்க்கிற்கு செல்லும் விமானங்களுக்கு இன்று மதியம் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மோசமான வானிலையால் கிழக்கு அமெரிக்காவில் சுமார் 120 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
வானிலை ஓரளவுக்குக் காரணம் என்றாலும், இந்த தாமதங்களும் ரத்துகளும் பல மாதங்களாகவே இருக்கின்றன. விமான நிறுவனங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. பணியாளர் பிரச்சனை காரணமாகவே கனடா வழியாக நியூயார்க் விமானங்களை இயக்கும் திறன் குறைந்துள்ளதாக பெடரல் விமானப் போக்குவரத்துக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
திங்கட்கிழமை மாலையில் அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா, மேரிலாந்து, டெலாவேர், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, டென்னசி, மேற்கு வர்ஜீனியா மற்றும் வர்ஜீனியா ஆகிய பகுதிகளில் புயல் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த மாகாணங்களில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.
யார் இந்த நெவில் ராய் சிங்கம்? இவரது நிதி நெட்வொர்க் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது எப்படி?