இப்படி பார்த்ததே இல்ல... அதிசயித்து போன விஞ்ஞானிகள்! உடைந்த உலோகம் தானாகச் சேர்ந்த அதிசயம் நடந்தது எப்படி?
சிறப்பு டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு நொடியும் 200 முறை உலோகத்தின் விளம்புகளை இழுத்து சோதனையைச் செய்துள்ளனர்.
ஒரு பிளவுபட்ட உலோகம் எந்தவிதமான மனிதத் தலையீடும் இல்லாமல் தானே மீண்டும் இணைந்தது விஞ்ஞானிகளை திகைக்க வைத்துள்ளது. சாண்டியா நேஷனல் லேபரேட்டரீஸ் மற்றும் டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலோகத்தின் நெகிழ்ச்சித்தன்மையை சோதித்துக்கொண்டிருந்தபோது இந்த ஆச்சரியமான நிகழ்வைக் கவனித்துள்ளனர்.
ஒரு சிறப்பு டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு நொடியும் 200 முறை உலோகத்தின் விளம்புகளை இழுத்து சோதனையைச் செய்துள்ளனர். இந்தச் சோதனையின் ஆரம்பத்தில் உலோகத்தில் ஒரு விரிசல் உருவானது. ஆனால் சுமார் 40 நிமிடங்களில், உலோகம் மீண்டும் ஒன்றாக இணைந்தது.
ஆராய்ச்சியாளர்கள் இதனை குளிர் இணைவு (Cold Welding) என்று குறிப்பிடுகின்றனர். வெற்றிடத்தில் 40 நானோமீட்டர் தடிமன் கொண்ட பிளாட்டினத்தில் மிகச்சிறிய அளவில் ஏற்பட்ட விரிசல் சுயமாகவே ஒன்றாக இணைந்ததை விஞ்ஞானிகள் கவனித்தனர்.
இந்தப் புதுமையான கண்டுபிடிப்பு பொறியியல் புரட்சியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தப் பரிசோதனையின் முடிவுகள் புகழ்பெற்ற அறிவியல் பத்திரிகையான 'நேச்சர்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
"கோல்டு வெல்டிங் செயல்முறை என்பது ஒரு உலோகவியல் செயல்முறையாகும். இரண்டு உலோகங்களின் சுத்தமான மேற்பரப்புகளைக் ஒன்றிணைக்கும்போது அணு பிணைப்புகள் ஏற்படும்" என்று சாண்டியா தேசிய ஆய்வக விஞ்ஞானி பிராட் பாய்ஸ் கூறுகிறார்.
"டெர்மினேட்டர் திரைப்படத்தில் வரும் தங்களை சுயமாக குணப்படுத்திக்கொள்ளும் ரோபோக்கள் போல் இல்லை. இந்த நிகழ்வு மனிதர்களில் நடைபெறும் வாய்ப்பு இல்லை. நானோ அளவில் நடக்கும் இந்த நிகழ்வை எங்களால் இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை" எனவும் பிராட் பாய்ஸ் சொல்கிறார்.
உலோகத் துண்டுகள் சுமார் 40 நானோமீட்டர்கள் தடிமனாகவும் சில மைக்ரோமீட்டர்கள் அகலமாகவும் இருந்தன. பிளாட்டினம் மற்றும் தாமிரத்தில் மட்டுமே குணப்படுத்தும் சோதனைகள் காணப்பட்டாலும், மற்ற உலோகங்களில் சுய-குணப்படுத்துதல் ஏற்படலாம் என்றும், எஃகு போன்ற உலோகக் கலவைகள் இந்தத் தரத்தை வெளிப்படுத்துவது "முற்றிலும் நம்பத்தகுந்தது" என்றும் பாய்ஸ் கூறினார்.