உங்கள் வருகைக்கான ஒட்டுமொத்த இந்தியாவே காத்திருக்கிறது.. துணை அதிபர் கமலா ஹாரிசை நெகிழவைத்த பிரதமர் மோடி.
இந்தியாவிற்கு வருமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். உலகெங்கும் உள்ள பலருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உத்வேகமாக இருக்கிறார் என்றும், அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளி நாடுகள் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு வருமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். உலகெங்கும் உள்ள பலருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உத்வேகமாக இருக்கிறார் என்றும், அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளி நாடுகள் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாடு வாஷிங்டனில் இன்று வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றுள்ள நிலையில் முதன் முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் ஐந்து முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார். அவர்களைத் தொடர்ந்து அமெரிக்க துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்சை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
பின்னர் பிரதமர் மோடி மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்திய உலகலாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இரு நாட்டுக்கும் இடையே வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் பி2 பி இணைப்புகள் குறித்தும் விவாதித்தனர். அப்போது கமலா ஹாரிசுடன் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் துணை அதிபராக உங்களை தேர்வு செய்தது ஒரு முக்கியமான , வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது. உலகெங்கிலுமுள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் வருகைக்காக ஒட்டு மொத்த இந்தியாவும் காத்திருக்கிறது.
இந்திய வருகைக்காக உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையின் கீழ் அமெரிக்க- இந்தியா உறவுகள் புதிய உயரத்தை எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியா இரண்டாவது கொரோனா தொற்று அலையால் பாதிக்கப்பட்ட போது இந்தியாவுக்கு உதவியதற்காக அமெரிக்காவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா அமெரிக்கா என்பது இயற்கையான கூட்டாளி நாடுகள் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.