அச்சச்சோ ! இதுமட்டும் நடந்தால்..செர்னோபில் பயங்கரம் மீண்டும்..உக்ரைன் தப்புமா ?
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை சுற்றி வளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலே முடிந்துள்ளது. சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதால் சண்டையின் தீவிர தன்மை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அப்படி நடக்குமா ? என்று சந்தேகம் எழுந்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
எனினும்,கார்கிவ் நகரை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில்,உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் குலேபா தெரிவித்துள்ளார் .
ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும்,அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் அணு உலை விபத்தை விட 10 மடங்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.