ஹாலிவுட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக சம்பாதிக்கும் நடிகர் என்ற பெருமையை தி ராக் என்றழைக்கப்படும் டுவைன் ஜான்சன் பெற்றுள்ளார்.ஆண்டுதோறும் சினிமா, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகம் சம்பாதிக்கும் பிரபல நபர்களின் பட்டியலை, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2018ம் ஆண்டுக்கான அதிகமாக சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2018 ஜூன் வரையான காலத்தில் இவர்கள் சம்பாதித்த வருமானத்தை அடிப்படையாக வைத்து இந்த பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலில், தி ராக் இடம்பிடித்துள்ளார். 

மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளின் மூலம் உலக அளவில் தி ராக் எனப் பிரபலமாகியுள்ள டுவைன் ஜான்சன், தற்போது ஹாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.அவர், கடந்த ஓராண்டு காலத்தில், 124 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளார். இது, உலக சினிமா வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு நடிகர் சம்பாதித்துள்ள அதிக தொகையாகும். இப்பட்டியலில் 2ம் இடத்தை மற்றொரு பிரபல நடிகரான ஜார்ஜ் க்ளூனி பிடித்துள்ளார். அவர் தனது வர்த்தகம் சார்ந்த வருமானம் வழியாக இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆனால், தி ராக் வெறும் நடிப்பு மூலமாகவே இந்த வருமானத்தை ஈட்டியுள்ளதாக, ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.இதுதொடர்பாக, மகிழ்ச்சி தெரிவித்துள்ள தி ராக் ஜான்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘’வாவ்.. நான் எதிர்பார்க்காத ஒரு செய்தி கிடைத்துள்ளது. மகிழ்ச்சி.. நான் மற்றவர்களைப் போல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு எதுவும் படிக்காதவன். சொந்தமாக தொழில் செய்ய முயன்று தோற்றுப் போனவன். ஆனால், நான் எனக்காக உழைக்கிறேன். அதனை உலக மக்களுக்கு சமர்ப்பிக்கறேன். வெறும் பாக்கெட் மணிக்காக மல்யுத்தம் செய்ய ஆரம்பித்தேன். இன்றைக்கு மில்லியன் கணக்கில் சம்பாதிக்கறேன்.. இன்னும் நிறைய சம்பாதிக்க விரும்புகிறேன்,’’ என தி ராக் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.