இந்தியாவுடனான எங்கள் உறவு  வரலாற்றுப் பூர்வமானது, இந்தியாவுக்கும் பங்களாதேஷ்க்கும் இடையேயான உறவு பாறையைப் போல் வலுவானது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே அப்துல் மோமின் கூறியுள்ளார். அதேபோல்  இந்தியா மற்றும் சீனாவுடனான பங்களாதேஷின் உறவை ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். 1971ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய எல்லையில் மேற்கு மெஹர்பூரில் உள்ள தியாகிகளின் நினைவுச் சின்னத்தை பார்வையிட்ட பின்னர் மோமின்  இவ்வாறு கூறினார். 

.கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15 ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி  நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொடூரத் தாக்குதலில், 20 இந்திய ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். அதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், இரு நாட்டு  ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து இந்தியாவை எதிர்த்து வருகின்றன.  இந்நிலையில் தனக்கு ஆதரவாக செயல்படும் நாடக  பங்களாதேசையும் மாற்ற சீனா முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான், பங்ளாதேசுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளது. சீனா அதிபர் ஜி ஜின்பிங் பங்களாதேஷ் உடன்  உறவு பாராட்டும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறார். 

இதனால் பங்களாதேசும் சீனாவின் கைப்பாவையாகிவிட்டதோ என்ற சந்தேகம் இந்தியாவுக்கு எழுந்தது. இந்நிலையில் அதை தெளிவுபடுத்தும் வகையில் பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது 1971 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்ய தயாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இந்திய எல்லையான மேற்கு மெஹர்பூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவுக்கும்-பங்ளாதேஷ்க்குமான உறவு வரலாற்று ரீதியானது, அது கற்பாறையை போல வலுவானது. அது ரத்த உறவு, அதேநேரத்தில் சீனாவுடன் முக்கியமான பொருளாதார உறவும் பங்ளாதேஷ்க்கு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை ஒப்பிட்டுக் கூற முடியாது. மொத்தத்தில் எங்கள் வெற்றி இந்தியாவின் வெற்றி,  எங்கள் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி,  ஒரு போதும் இந்தியா-பங்களாதேஷ் உறவில் பங்கம் ஏற்படாது என்றார். 

மேலும் இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான எல்லை தகராறு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், இந்தியாவுடனான பங்ளாதேசின் தற்போதைய உறவு அற்புதமானது எனக் கூறியுள்ளார். அதேபோல், அடுத்த ஆண்டு பங்களாதேஷில்  50ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட, இரு நாடுகளும் தயாராக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே சில சிக்கல்கள் எஞ்சியுள்ள நிலையில், அது பேச்சுவார்த்தையின் மூலம் நாங்கள் விரைவில் தீர்ப்போம் என்று அவர் கூறினார்.