கனடாவின் டொராண்டோவில் விமானம் தலைகீழாக கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்தனர். 

கனடாவின் டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்தது. அதாவது மினியாபோலிஸிலிருந்து டொராண்டோ நோக்கி டெல்டா ஏர்லைன்ஸ் விமானமான மிட்சுபிஷி CRJ-900LR சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் நான்கு பணியாளர்கள் உட்பட 80 பேர் இருந்தனர்.

நேற்று பிற்பகல் 2:15 மணியளவில் டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளாகி பலடி அடித்து தலைகீழ்காக கவிழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 17 பேர் படுகாயம் அடைந்தனர். நல்லவேளையாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

டொராண்டோ விமான நிலைய ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா பிளின்ட் கூறுகையில், ''டெல்டா ஏர்லைன்ஸ் கவிழ்ந்த விபத்தில் எந்தவொரு உயிர் இழப்பும் ஏற்படவில்லை. சிறு காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்து காரணமாக கனடாவில் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையத்தில் இரண்டரை மணி நேரத்துக்கு மேலாக சேவைகள் பாதிக்கப்பட்டது'' என்றார்.

டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் கவிழ்ந்த பிறகு அந்த விமானம் கவிழ்ந்து கிடக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மேலும் அந்த விமானத்தில் இருந்து பயணிகள் பதற்றத்துடன் வெளியேறும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. இந்த விமான விபத்துக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மோசமான வானிலை இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.