சீனக் கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக எரிந்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மூழ்கியது; பணியாற்றிய யாரும் உயிர் பிழைக்கவில்லையாம்...
கிழக்கு சீனக் கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் தற்போது மூழ்கிவிட்டது.இதில் பணியாற்றிய யாரும் உயிர்பிழைக்கவில்லை என்று இரான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரான் நிறுவனத்துக்கு சொந்தமான பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சரக்கு கப்பல் இரான் நாட்டில் இருந்து தென் கொரியாவிற்கு 1,36,000 டன் அளவிலான இரான் நாட்டு எண்ணெயை கொண்டு சென்றது சான்சி கப்பல்.
இந்த கப்பல் அமெரிக்காவில் இருந்து சீனாவின் குவாங்டாங் நகருக்கு சுமார் 64 ஆயிரம் டன் உணவு தாணியங்களை ஏற்றிவந்த ஹாங்காங் சரக்கு கப்பலின்மீது மோதியது.
சுமார் 274 நீளமுள்ள சான்சி கப்பல் சீனாவின் தொழில்நகரமான ஷாங்காயிலிருந்து 160 நாட்டிகல் மைல் தூரத்தில் சீன சரக்கு கப்பலுடன் மோதி கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று இந்த மோதல் நடந்தது.
மோதிய அதிர்ச்சியில் இரான் நாட்டு எண்ணைய் கப்பல் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த கப்பலை மீட்க, மோசமான காலநிலை நிலவிவந்த போதிலும், சுமார் 13 கப்பல்கள் மற்றும் இரானிய கமாண்டோ பிரிவு ஒன்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கப்பலின் தீயை அணைக்க ஒருவார காலமாக போராடியும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
ஹாங்காங் கப்பலில் பணியாற்றிய அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். ஆனால், எண்ணெய் கப்பலில் பணியாற்றிய 32 பேரும் உயிரிழந்து விட்டனர் என்றும், கப்பலில் யாரும் உயிரோடு இருப்பதற்கான நம்பிக்கை இல்லை என்றும் இரானியக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மொஹமத் ரஸ்தட் தெரிவித்துள்ளார்.
கப்பலில் பணியாற்றிவர்களில் 30 பேர் இரானியர்கள், 2 பேர் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே கப்பலில் பணியாற்றிய இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனிடையே கிழக்கு சீனக் கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருந்த எண்ணெய் டாங்கர் வேகமாக எரிந்து மதிய வேளையில் மூழ்கியது என்று சீன ஊடகத்தில் செய்தி வெளியானது..
இந்த விபத்துக்கு என்ன காரணம்? என்று இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.