பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த பலுசிஸ்தான் ஆர்வலர்கள் கரிமா பலூச் கனடா நாட்டில் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொரண்டோவில் அவர் வசித்து வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக பலுசிஸ்தான் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பலுசிஸ்தானில் பிரபலமான ஆளுமைகளில் ஒருவரான கரிமா பலுச் இருந்துவந்தார். பலுசிஸ்தானில் உள்ள  பெண்களின் உரிமைக்காக போராடி அவர், பாகிஸ்தான் பலுசிஸ்தானின் வளங்களை பரித்து தங்கள் மக்களை தங்கள் சொந்த இடங்களில் இருந்து விரட்டி அடிப்பதாகவும் குற்றஞ்சாட்டி வந்தார், பாகிஸ்தான் ராணுவத்தால் பலுசிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்தியும் அவர் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான்  சுதந்திரத்துக்கான அவரின் பிரச்சாரங்கள் தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டு பிபிசி கரிமா பலூச்சை உலகின் 100 செல்வாக்குமிக்க பெண்களில் ஒருவராக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 

பலூச் மக்களை பாகிஸ்தான் அரசாங்கமும், அதன் ராணுவமும் கடத்தல், சித்திரவதைக்குட்படுத்துவதாகவும் அதில் ஏராளமான பாகிஸ்தான் இளைஞர்கள் மற்றும் பெண்கள் காணாமல் போவதாகவும், மனித உரிமை மீறல்கள் தலைவிரித்தாடுவதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தை அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.  பாகிஸ்தானில் உள்ள சட்ட அமைப்பு மற்றும் மத குழுக்கள் மாநில மற்றும் சமூக இயந்திரங்கள் எவ்வாறு பெண்களை குறி வைத்து தாக்குகிறது என்பதையும் அவர் உலகநாடுகளுக்கு எடுத்துரைத்து வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தனது கடைசி ட்விட்டில், அவர் "  பாகிஸ்தானில் கடத்தல், சித்திரவதை, கொலையால், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்"  என்ற தலைப்பில் கருத்து பதிவிட்டிருந்தார் என தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. 

முன்னதாகவே பாகிஸ்தான் ராணுவத்தின் அச்சுறுத்தலால் பலுசிஸ்தானில் இருந்து வெளியேறி கனடாவில் அகதியாக கரிமா பலூச் தஞ்சமடைந்திருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் காணாமல் போனதாக  கூறப்படுகிறது, கடைசியாக அதே நாளில் மாலை 3 மணி அளவில் டொராண்டோவில் பே ஸ்ட்ரீட் மற்றும் குயின்ஸ் குவே  வெஸ்ட்  பகுதியில் பலூண் காணப்பட்டதாகவும் அவரை கண்டு பிடிக்க பொது மக்களின் உதவியை நாடியதாகவும் டொராண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கரிமா பலுச்சின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.இவரின் மரணத்திற்கு பின்னணியில் பாகிஸ்தான் உளவுப்பிரிவு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த பலூச் தலைவர்கள் மர்மமான முறையில் இறந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. 

கடந்த மே மாதம் பலூச் பத்திரிகையாளர் சஜித் ஹுசேன் சுவீடனில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் மார்ச் 2-ஆம் தேதி முதல் உப்சாலா  நகர் அருகே உள்ள  பைரஸ் ஆற்றில் இறந்து கிடந்தார். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் மாயமானது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பலூச் முக்கிய தலைவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை குறிவைத்து கொலை செய்து வருவதாக சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கரிமா பலூச்சின் மர்ம மரணம் சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பலூச் மக்களை மிகுந்த அதிர்ச்சயடைய வைத்துள்ளது.