India in Ukraine : "உடனே வெளியேறுங்க.. சீக்கிரம்.." இந்தியர்களுக்கு 'அதிர்ச்சி' கொடுத்த இந்திய தூதரகம் !!
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் உடனடியாக இன்றே வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல் செய்திருக்கிறது.
முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.
அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள். ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
ரஷிய படை இதுவரை உக்ரைனின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. ஆனால் தலைநகர் கிவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை இன்னும் கைப்பற்றவில்லை. இந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கார்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை வீசப்பட்டது.
அதே போல் கிவ் நகர் அருகே உள்ள எரிவாயு குழாய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணெய் கிடங்கு முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் எரிவாயு குழாயில் இருந்து நச்சுபுகை வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. நேற்றும் கிவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் தொடர்ந்து சண்டைகள் நடந்தன. இந்த நிலையில் ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
நேற்று ரஷியாவின் தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து இருந்தது. ஆனால் நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தலைநகர் கிவ்வில் மீண்டும் சண்டை உச்சக்கட்டத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் உடனடியாக இன்றே வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல் செய்திருக்கிறது. எந்த வகையான போக்குவரத்தையும் பயன்படுத்தி உடனே வெளியேற வேண்டும் என்றும், உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் பணியில் விமானப்படை ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறியிருக்கிறது. இந்தியர்களை வெளியேற்றுவதுடன் அங்குள்ளவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்து உள்ளிட்ட உதவிப்பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.