இந்தியாவில் இலவசமாக கிடைக்கும் பை அமெரிக்காவில் ரூ.4,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
India's Free bag selling for Rs 4,000 in USA: இந்தியாவில் நாம் காய்கறிகள் அல்லது ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு வீட்டிலிருந்து ஒரு பையை எடுத்துச் செல்கிறோம். அதே நேரத்தில், அதிக பொருட்கள் வாங்கினால் ஒரு பையை இலவசமாகக் கொடுக்கும் கடைக்காரர்கள் பலர் உள்ளனர். ஆனால் இந்தியாவில் இலவசமாகக் கிடைக்கும் பையை, அமெரிக்காவில் உள்ள மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதைக் கேட்டதும் நீங்கள் சிரிக்கலாம்.
இந்தியாவில் இலவச பை, அமெரிக்கவில் 48 டாலர்
ஆனால் அது உண்மைதான். இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் பருத்தியால் ஆன ஒரு பை அமெரிக்காவில் ரூ.4,200க்கு விற்கப்படுகிறது. அதாவது அமெரிக்காவின் சொகுசு கடையான நார்ட்ஸ்ட்ரோமின் இணையதளத்தில் இந்தியாவில் இலவசமாக கிடைக்கும் இந்த பையை "இந்திய நினைவுப் பை" என்று மறுபெயரிட்டு 48 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.4,100) விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பை இப்போது அமெரிக்கர்களுக்கு ஒரு ஆடம்பரப் பையாக மாறிவிட்டது.
அமெரிக்காவின் நார்ட்ஸ்ட்ரோம் இணையதளம்
ஜப்பானிய பிராண்டான பியூப்கோவின் “இந்திய நினைவுப் பை” ஒரு வித்தியாசமான, மறுசுழற்சி செய்யப்பட்ட துணைப் பொருளாக சந்தைப்படுத்தப்படுகிறது. 'இந்திய நினைவுப் பை'தனித்துவமான வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்டைலான பை. அழகான நாட்டின் (இந்தியா) மீதான உங்கள் அன்பைக் காட்டும் அதே வேளையில் உங்கள் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஏற்றது" என்று நார்ட்ஸ்ட்ரோம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருத்தியால் செய்யப்பட்ட பை
மேலும் இது "எந்தவொரு பயணி அல்லது இந்திய கலாச்சாரத்தை விரும்புபவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று" என்று கூறி விற்பனை செய்யப்படுகிறது. பருத்தியால் செய்யப்பட்ட இந்தப் பையில், "ரமேஷ் ஸ்பெஷல் நம்கீன்", "அனிதா கன்ஃபெக்ஷனரி வொர்க்ஸ்" மற்றும் "சேதக் ஸ்வீட்ஸ்" என்று எழுதப்பட்ட இந்தி வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன.
நெட்டிசனகள் வேடிக்கையான கமெண்ட்
அமெரிக்காவில் இந்த பை விற்பனை செய்யப்படுவது இணையத்தில் வைராகி விட்ட நிலையில் பலரும் வேடிக்கையான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ''என் அம்மா கடையில் இருந்து மாதந்தோறும் மளிகைப் பொருட்களை வாங்கிய பிறகு இந்த பையை இலவசமாக கொடுக்கவில்லை என்றால் மீண்டும் உங்கள் கடைக்கு வர மாட்டேன் என கடைக்காரரிடம் மிரட்டுவார். இந்த பையையா நீங்கள் (அமெரிக்கர்கள்) 48 டாலர் கொடுத்து வாங்குறீங்க'' என்று ஒருவர் வேடிக்கையாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
''இந்த பை முழுவதும் தின்பண்டங்களை நிரப்பினால் கூட, அது பையின் விலையான 48 டாலருக்கு வராது'' என்று மற்றொருவர் வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார்.
