குழந்தையே கெஞ்சியும் கொஞ்சமுடியாத மருத்துவர்... கொரோனாவுக்கு சிகிச்சையளித்த தந்தை பாசப்போராட்டம்..!
கொரோனோ தொற்று உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. சாவு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டு மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இருப்பினும் மருத்துவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டெடுக்க ப்போராடி வருகின்றனர். பல மருத்துவர்கள் தங்களின் குடும்பத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாதென மருத்துவ கல்லூரி விடுதியிலும், மருத்துவமனைகளிலும், சாலையோரம் கார்களிலும் தங்கி கடமையாற்றி வருகின்றனர்.
தங்களின் குடும்பங்களை சந்திக்கும் மருத்துவர்களின் பாசப்போராட்ட வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிலும் அதே போன்று அப்பாவை அணைக்க துடிக்கும் மகளின் பாச போராட்டம் அனைவரது கண்களையும் கலங்க செய்வதாக உள்ளது.
மருத்துவரான தன் அப்பாவை பார்த்ததும் கட்டி அணைக்க ஓடிவரும் மகள், ஆனால் அப்பா மகளை தொட கூட முடியாமல் வாசலின் கண்ணாடிக்கு வெளியே அமர்ந்துள்ளார். கதவை திறக்க சொல்லி குழந்தை தன் மழலை மொழியால் அம்மாவிடம் சிணுங்குகிறாள். மீண்டும் குழந்தை கண்ணாடிக்கதவை திறக்க தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனால் கதவை திறக்க முடியவில்லை என்பதால் கலங்கி அழுகிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.