இதயத்தை வீங்க வைக்கும் அந்த கொரோனா தடுப்பூசி... ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
இதயத்தில் வீக்கம் ஏற்பட்ட பெரும்பாலான நோயாளிகள் நான்கு நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் இருக்கவில்லை. அவ்வளவு விரைவாக குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி குறித்து இஸ்ரேல் நடத்தியுள்ள ஆய்வு மற்று, அந்நாட்டில் பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பக்கவிளைவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த டிசம்பர் முதல் மார்ச் வரை பைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 5 மில்லியன் இஸ்ரேல் மக்களில், 275 பேருக்கு இதயத்தில் வீக்கம் (மயோர்கார்டிடிஸ் நோய்) ஏற்பட்டுள்ளது. இந்த 275 பேரில் பெரும்பாலானோர் இளைஞர்கள் எனவும், அதுவும் 16 முதல் 30 வயதானவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அறிவித்த இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம், இதுகுறித்து விசாரிக்க 3 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது.
இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க, அதனை இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், “பைசர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெறும் 16 முதல் 30 வயதுடைய ஆண்களிடையே மயோர்கார்டிடிஸ் தோன்றுவதற்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.
கண்டுபிடிப்புகளின்படி, இதுபோன்ற தொடர்பு மற்ற வயதினரை விட 16 முதல் 19 வயதுடைய ஆண்களிடையே அதிகம் காணப்பட்டது. எனினும், இதயத்தில் வீக்கம் ஏற்பட்ட பெரும்பாலான நோயாளிகள் நான்கு நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் இருக்கவில்லை. அவ்வளவு விரைவாக குணமடைந்துள்ளனர். மேலும் இந்த பாதிப்பு 95 சதவிகிதம் லேசானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளது.
இஸ்ரேல் ஆய்வு தொடர்பாக பைசர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மயோர்கார்டிடிஸ் நோய் தொடர்பான இஸ்ரேலிய கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்துள்ளோம். இந்த விவகாரத்தில் பாதகமான நிகழ்வுகள் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. தரவுகளை மதிப்பாய்வு செய்ய, பைசர் நிறுவனம், இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் தடுப்பூசி பாதுகாப்பு துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
வழக்கமாக தடுப்பூசி செலுத்தப்படும்போது, மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவில் இந்தப் பாதிப்பு ஏற்படும். அந்த அளவிலேயே இஸ்ரேலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் வழக்கத்தை விட அதிக பாதிப்பு இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. அதேநேரம் தடுப்பூசிக்கும், இதய வீக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது என ஆய்வில் தெளிவுபடுத்தப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தற்போது 12 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இருக்கும் அறிவிப்பை இன்னும் சில தினங்களில் அந்நாட்டு அரசு வெளியிட இருந்தது. இந்நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி இருப்பதன் மூலம் இந்த தடுப்பூசி திட்டம் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.