வல்லரசு நாடுகளை அதிரவிட்ட தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள்..!! மலிவு விலையில் மருந்து என அதிரடி..!!
2021 க்குள் கொரோனா வைரசை தடுப்பதற்கான ஒரு சிறப்பான தடுப்பூசியை தாய்லாந்து தயாரிக்கும் என அந்நாட்டின் உயர் தலைமை அறிவித்துள்ளது .
வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விட மிக மலிவான விலையில் கொரோனா தடுப்பூசிகளை உலகிற்கு தாய்லாந்து வழங்குமென அந்நாடு உறுதிபட தெரிவித்துள்ளது. உலக அளவில் வல்லரசு நாடுகள் போட்டிப்போட்டு மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் தாய்லாந்து இவ்வாறு கூறியுள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்து 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா ரஷ்யா, உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக நிலைகுலையச் செய்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 17 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அங்கு உயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. ஒரு பிரத்தியேக தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறி வரும் நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவில் மட்டும் 40 மருந்துகள் ஆராய்ச்சியில் இருப்பதாகவும், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவுக்கு மருந்து தயாராக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலக அளவில் தடுப்பூசிகள் உருவாவதற்கு முன்னரே அதற்கான வணிகத்தில் அந்தந்த மருந்து நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ள தாய்லாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், எலிகள் மீது வெற்றிகரமாக பரிசோதனைகள் செய்த பிறகு மக்காக் குரங்குகள் மீது பரிசோதனையை தொடங்கியுள்ளது, 2021 க்குள் கொரோனா வைரசை தடுப்பதற்கான ஒரு சிறப்பான தடுப்பூசியை தாய்லாந்து தயாரிக்கும் என அந்நாட்டின் உயர் தலைமை அறிவித்துள்ளது . மேலும் விரைவான மற்றும் மலிவான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது , சுமார் 13 குரங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனையை மேற்பார்வையிட்டு வரும் தாய்லாந்து தேசிய பிரைமேட் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சுசிந்த மால்விஜிட்ஜோண்ட் , கடந்த சனிக்கிழமை இதுகுறித்து கூறுகையில் மேட் இன் தாய்லாந்து தடுப்பூசி ஐரோப்பிய அல்லது அமெரிக்க மருந்துகளை விட மலிவானதாக இருக்கும் என கூறியுள்ளார். கடந்த ஜனவரி கொரோனா பரவியபோது சீனாவுக்கு பிறகு அந்த வைரஸ் தாய்லாந்தில்தான் அதிகம் பரவியது. ஆனால் சிறப்பான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய்த்தொற்று எண்ணிக்கை வெறும் 3 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இதுவரை அங்கு மொத்தம் 57 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர், இந்நிலையில் தாய்லாந்து மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.