அமெரிக்காவில் டெஸ்லா மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர், அந்த காரில் இருந்து இறங்குவது போல அருமையாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக கடந்த 28-ம் தேதி இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் நகரத்துக்கு சென்றார். அங்கு, தொழில் தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, 1-ம் தேதி அமெரிக்கா சென்றார். 3-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்டார். அவருக்கு மின்சாரக் கார் தொழில்நுட்பம் குறித்து அதிகாரிகள் விளக்கினர். இதனைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் டெஸ்லா கார் தொழிற்சாலை தொடங்க அவர் அழைப்பு விடுத்தார். 

தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் மக்களின் போக்குவரத்து சேவையை இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அந்த வகையில் டெஸ்லா கார் நிறுவனம் தமிழகத்திற்கு வந்தால் தமிழக அரசு சார்பாக முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார்.

டெஸ்லா நிறுவன அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதலமைச்சரும், முதலமைச்சருக்கு டெஸ்லா நிறுவனத்தினரும் நினைவுப் பரிசுகளை வழங்கினர். இந்த விழாவில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.