ரஷ்யாவில் தணிந்தது பதற்றம்: வாக்னர் குழுவுடன் சமாதானம் - முழு விவரம்!

வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் பெலாரஸுக்கு அனுப்பப்படுவார் என அந்நாட்டு அதிபர் மாளிகை க்ரெம்ளின் தெரிவித்துள்ளது

Tensions eased in Russia Wagner group chief will move to Belarus

உக்ரைன் உடனான போரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு நேற்று புதிய நெருக்கடி ஒன்று உருவானது. ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு அந்நாட்டு அரசுக்கு எதிராக திரும்பியதே இந்த நெருக்கடிக்கு காரணம்.

இந்த நிலையில், கைது நடவடிக்கையை தடுக்க வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் பெலாரஸுக்கு அனுப்பப்படுவார் என அந்நாட்டு அதிபர் மாளிகை க்ரெம்ளின் தெரிவித்துள்ளது. இதுகுறித்து க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், தனியார் ரஷ்ய ராணுவ அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் அண்டை நாடான பெலாரஸுக்கு அனுப்பப்படுவார். இது அவரையும் அவரது துருப்புக்களையும் குற்றவியல் வழக்குகளில் இருந்து காப்பாற்றும்.” என்றார். இந்த சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு, வாக்னர் குழுவின் துருப்புக்கள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீதான தங்கள் அணிவகுப்பை நிறுத்தியுள்ளது. இதனால், அந்நாட்டில் பதற்றம் தணிந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு வாக்னர் என்ற ஆயுதக் குழு ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பான வாக்னர் குழுவை தனியார் கூலிப்படை என்றும் அழைக்கின்றனர். ரஷ்யா மட்டுமல்லாமல், வேறு பல நாடுகளிலும் வாக்னர் குழு, அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு ஆதரவாக ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில் களத்தில் போர் புரிந்திருக்கின்றன. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டிருந்தாலும், அந்நாட்டு அதிபர் விளாடிமர் புடினின் மறைமுக ஆதரவோடு வாக்னர் குழு மட்டும் இயங்கி வந்தது. தேவைப்படும்போது, ரஷ்ய அரசுக்கு ஆதரவாக, அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து வாக்னர் குழு போரில் ஈடுபடும். ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுக்கு வாகர்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் மிகவும் நெருக்கமானவர். புடினின் சொந்த தனியார் ராணுவம் என்றும் இந்த குழுவினரை அழைக்கிறார்கள்.

உக்ரைன் மீதான ரஷ்ய போரிலும் கூட, ஏன் அதற்கு முன்னர் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியபோது, வாக்னர் குழுவின் பங்களிப்பு அளப்பரியது. ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினே வாக்னர் குழுவின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார்.

ஆனாலும், வாக்னர் ஆயுதக் குழுவுக்கும், ரஷ்ய ராணுவத் தலைமைக்கும் இடையேயான அதிகார மோதல் நீடித்து வந்தது. இந்த மோதலானது உக்ரைன் போரின் போது முற்றியது. உக்ரைன் போரின்போது தங்களது வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களைக் கொடுப்பதில் ரஷ்ய ராணுவம் தாமதம் செய்தது. இதனால், ஏராளமான வீரர்கள் உயிரிழந்ததாக வாக்னர் குழு கடந்த சில மாதங்களாகவே குற்றம் சாட்டி வந்தது. வாக்னர் ஆயுதக் குழுவில் சுமார் 50,000 பேர் இருந்த நிலையில், உக்ரைன் போரில் மட்டும் அதில் பாதி பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்.. பொது நிகழ்ச்சிகளுக்கு ஜூலை 1 வரை தடை.. ரஷ்யாவில் என்ன நடக்கிறது?

அதேசமயம், வாக்னர் குழுவுக்கு ரஷ்ய ராணுவம் தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின், உக்ரைனில் உள்ள தங்கள் படைகள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி 2000 க்கும் மேற்பட்டோரை கொன்றதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைந்த வாக்னர் குழுவினர், ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரில் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மேலும், ரஷ்யாவின் ரொஸ்தொவ் நகரை வாக்னர் குழு கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தனது படையினருக்கு ப்ரிகோஜின் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த ஆடியோவில், “நாங்கள் 25,000க்கும் மேற்பட்டோர் இருக்கிறோம். சாகவும் தயாராக இருக்கிறோம்ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடையாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம். ரஷ்ய ராணுவத்தின் தலைமையை வீழ்த்துவோம்.” என்று எச்சரிக்கை விடுத்தார். ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னைச் சந்திக்காவிட்டால் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் செல்லப் போவதாகவும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் மிரட்டல் விடுத்திருந்தார்.

மேலும், மாஸ்கோ அணிவகுப்பை கிளர்ச்சி என்று பிரகடனப்படுத்திய ப்ரிகோஜின், “இது ஆட்சிக் கவிழ்ப்புக்கான ராணுவ சதி அல்ல, இது நீதிக்கான அணிவகுப்பு” என்றும் கூறியிருந்தார். இதனால், ரஷ்யாவில் பதற்றம் அதிகரித்தது. வாக்னர் படைகள் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக கூறப்பட்டதால், ரஷ்யாவில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. இதனால் மாஸ்கோ நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆயுதம் ஏந்திய வீரர்கள் தெருக்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். தலைநகர் மாஸ்கோவைச் சுற்றி ரஷ்ய விமானப்படை தற்காப்பு எல்லைகளை அமைத்தன.

வாக்னர் குழுவுக்கு ரஷ்ய மக்களின் ஆதரவும் உள்ளது. அந்த குழுவில் சுமார் 20,000 பேர் இருக்கலாம் எனவு, ரஷ்ய ராணுவத்தில் சுமார் 8 லட்சம் பேர் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்படுகிறது. எனவே, அக்குழுவினர் எளிதாக வீழ்த்தப்படலாம் என்ற போதிலும், சமீபத்திய காலங்களில் ரஷ்ய அரசுக்கு எதிரான மிக பெரிய கிளர்ச்சி இது எனவும், புடினுக்கு இது மிகவும் சவாலாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.

வாகன்ர் குழுவின் நடவடிக்கையையடுத்து, நாட்டு மக்களுக்கு அதிபர் விளாடிமர் புடின் ஆற்றிய உரையில், அனைத்து படைகளும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நடந்த நிகழ்வுகள் 'ஒரு துரோகம்' என்றும், ரஷ்ய மக்களை முதுகில் குத்தும் செயல் என்றும் புடின் சாடியிருந்தார்.

இதனிடையே,  இரவு நேரத்தில் தனது அணிவகுப்பை திடீரென நிறுத்திய ப்ரிகோஜின், தனது படையினருடன் தங்கள் தளத்திற்குத் திரும்பினார். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ப்ரிகோஜினுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில், கைது நடவடிக்கையை தடுக்க வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் பெலாரஸுக்கு அனுப்பப்படுவார் என அந்நாட்டு அதிபர் மாளிகை க்ரெம்ளின் தெரிவித்துள்ளது.  “ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக ப்ரிகோஜின் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் மற்றும் அவருடன் இணைந்த துருப்புக்கள் மீது வழக்குத் தொடரப்படாது.” என க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் கிளர்ச்சியில் பங்கேற்காத வாக்னர் குழுவினருக்கு பாதுகாப்புத்துறை  அமைச்சகத்தால் தொடர்ந்து ஒப்பந்தங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருக்கும் அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் சவாலாக இருந்த நெருக்கடியை தனிப்பதற்காக இதுபோன்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு ப்ரிகோஜினும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் பதற்றம் தணிந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios