போர் விமானத்தை குவிக்கும் பாகிஸ்தான்... காஷ்மீர் எல்லைப்பகுதியில் பதற்றம்..!
இந்திய எல்லையின் லடாக்கை ஒட்டிய பகுதியில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருவதால் காஷ்மீர் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்திய எல்லையின் லடாக்கை ஒட்டிய பகுதியில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருவதால் காஷ்மீர் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தடாலடியாக மசோதாவைக் கொண்டு வந்து, அதனை சட்டமாக நிறைவேற்றிக் காட்டியது.
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதேபோல் பாகிஸ்தானும் காஷ்மீர் விஷயத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று, அம்மாநில மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறி வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கே பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறது. இந்நிலையில் இந்திய எல்லையின் லடாக்கை ஒட்டிய பகுதியில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
குறிப்பாக தாக்குதலுக்கு பயன்படும் ஜெ.எப்-17 ரக போர் விமானங்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. மேலும் 3சி-130 ரக விமானங்களும் அடங்கும். இதனை இந்திய அரசு தீவிரமாக கவனித்து வருகிறது. இந்திய ராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் எல்லைப் பகுதியில் தங்கள் பார்வையை திருப்பியுள்ளன. காஷ்மீர் விவகாரத்தால் கடுப்பாகி, இந்தியா மீது தாக்குதலை தொடுக்கவே இப்படி எல்லையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் காஷ்மீர் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.