தான்சானியா நாட்டில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 62 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.  

தான்சானியா நாட்டின் தலைநகரான டார் எஸ் சலாம் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மோரோகோரோ என்ற இடத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் லாரியில் இருந்த பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, லாரியில் இருந்து வரும் பெட்ரோலை பிடிப்பதற்காக பாத்திரங்கள் மற்றும் வாளிகளுடன் விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் குவிந்தனர். திடீரென யாரும் எதிர்பாராத விதமாக லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 62 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 65 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.