திடீரென ரத்தான ஏர் இந்தியா விமானம்.. பாரிஸ் ஏர்போர்ட்டில் உணவின்றி சிக்கி தவிக்கும் தமிழர்கள்..!
ஃபிரான்ஸின் பாரிஸ் நகரில் இருந்து டெல்லி வழியாக சென்னை வரவிருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்தானதால், பயணிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக பாரிஸ் விமான நிலையத்திலேயே முடங்கியுள்ளனர்.
ஃபிரான்ஸின் பாரிஸ் நகரில் இருந்து டெல்லி வழியாக சென்னை வரவிருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்தானதால், பயணிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக பாரிஸ் விமான நிலையத்திலேயே முடங்கியுள்ளனர்.
கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் 3 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவை தடுக்க, மார்ச் 25ம் தேதியிலிருந்து இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டன.
இதற்கிடையே, கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்தது. பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள், ஊரடங்கால் வேலையையும் வருமானத்தையும் இழந்ததுடன், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவந்தனர்.
இந்நிலையில், வந்தே பாரத் மிஷனின் மூலம் மே 7ம் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிற்கு திரும்ப அழைத்துவரப்படுகின்றனர்.
அந்தவகையில், ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து டெல்லி வழியாக சென்னைக்கு நேற்றிரவு 9.30 மணிக்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்தானது. அந்த விமானத்தில் இந்தியா வருவதற்காக, பாரிஸ் உள்ளிட்ட ஃபிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஸ்பெய்ன் உள்ளிட்ட மற்ற சில ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் சுமார் 250 பயணிகள் விமான நிலையத்திற்கு நேற்று(ஜூன் 17) பிற்பகலே வந்துவிட்டனர். இவர்களில் 200 பேர் பாரிஸில் இருப்பவர்கள்.
இரவு 9.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்தாகிவிட்டதாக, இரவு 11.15 மணிக்கு பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாரிஸ் மற்றும் ஃபிரான்ஸின் மற்ற பகுதிகளிலிருந்து வந்த பயணிகளுக்கு மட்டும், அருகிலுள்ள ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெய்ன் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து, அந்த குறிப்பிட்ட விமானத்தில் பயணிப்பதற்காக வந்த பயணிகள் விமான நிலையத்திலேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து விமான நிலையத்திலேயே தங்கியிருந்த அவர்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படவில்லை என்று அந்த பயணிகளில் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். டெல்லி வழியாக சென்னை வரவேண்டிய விமானம் என்பதால், அந்த பயணிகளில் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆவர். அந்த பயணிகளில் ஒருவர் தான் இந்த தகவலை வீடியோ மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விமான நிலையத்திலேயே தங்கி சிரமப்படுகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் ரத்தானதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு விமானம் புறப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு செல்லும் விமானங்கள், மறு அறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், மறு அறிவிப்பு வந்தால் மட்டுமே புறப்படும் என்றும் சில அதிகாரிகள் தெரிவித்ததாகவும் பயணிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதையடுத்து எப்போது விமானம் கிளம்பும், எப்போது சொந்த மண்ணில் காலடி வைப்போம் என்பதே தெரியாமல் பாரிஸ் விமான நிலையத்தில் பயணிகள் தவித்துவருகின்றனர்.