கனடாவின்,  வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றில், தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கும், களங்கப்படுத்தும் வகையில் மாடல் ஒருவர் மணப்பெண் கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார்.

மணப்பெண்ணின் மேலாடை விலகி, முழங்காலும், தொடையும் தெரியும் வகையில் அமர்ந்திருப்பது தமிழ் கலாச்சாரத்தில் மணப்பெண் இருக்க மாட்டார் என்று உலகத் தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மணப்பெண்

கனடாவில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். டொராண்டோ நகரில் இருந்து ‘ஜோடி’ என்ற பத்திரிகை வெளிவருகிறது. அந்த பத்திரிகை சமீபத்தில் ‘ இளவரசியான மணப்பெண்’ என்ற தலைப்பில் தமிழ் மணப்பெண் ஒருவரின் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்துள்ளது. தனுஷ்காசுப்பிரமணியம் என்கிற ஒரு தமிழ்பெண் அட்டைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். 

அட்டைப்படம் சர்ச்சை
இந்த பத்திரிகையில் வெளியான கட்டுரை சர்ச்சை ஏற்படுத்தாமல், அந்த அட்டைப்படமே பெரிய பிரச்சினையை கிளப்பியுள்ளது. அட்டைப்படத்தில் தனுஷ்கா சுப்பிரமணியம் மணப்பெண் அலங்காரத்தில் தொடை, அடிப்பாதம் வரை கால்களையும் வெளிக்காட்டியபடியும், சேலையை ஒரு புறம் விலக்கி போஸ் கொடுத்துள்ளார். இந்த அட்டைப்படம்தான் தமிழர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்கலாச்சாரமே அல்ல

பேஸ்புக்கில் தமிழர் ஒருவர் இந்த படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தார், அவரின் பதிவில், “ நீங்கள் செய்திருப்பது ரொம்ப தவறான செயல். இவர் ஒரு தமிழ்கலாச்சாரம் தெரிந்த மணப்பெண் கிடையாது.  இது போல சேலை அணிந்த தமிழ் மணப்பெண் ஒருவரை எங்கேனும் காண்பிக்க முடியுமா?. பழங்காலத்தில் தமிழ் பெண்கள் ஜாக்கெட் இல்லாமல் இருந்த காலத்தில் கூட இதுபோல் தங்கள் உடலை வெளிக்காட்டியதில்லை. எங்கள் கலாச்சாரத்தின் மூலம் எங்களின் அடையாளத்தை நீண்ட காலமாக வெளிப்படுத்தி வருகிறோம். தமிழ் கலாச்சாரத்தை கேலி செய்கிறார்கள்.” என்று கொதித்துள்ளார்.

குறி வைக்காதீர்கள் 

மற்றொரு நபர் வெளியிட்ட பதிவில், “ ஒரு குறிப்பிட்ட இனத்தவரை குறி வைத்து விமர்சிப்பது சமத்துவமா?. எந்த ஆடை அணியவும், யாருக்கும் உரிமை உண்டு.  ஆனால் ஒரு இனத்தவரின் நம்பிக்கைகளை தாக்கக்கூடாது. இந்த படத்தில் இருப்பது தமிழ்மணப்பெண் அல்ல” எனத் தெரிவித்துள்ளார். 

கலையுணர்வு இருக்கிறது

ஜோடி பத்திரிகையின் ‘கிரியேட்டிவ் டைரக்டர்” தட்சிகா ஜெயசீலன கூறுகையில், “ ஒரு மணப்பெண் தன்னை எப்படி வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம், தனித்தன்மை அதில் வெளிப்படும்.  மணப்பெண்கள் தங்கள் புடவையையும், நகையையும் எப்படி அணிய விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் காட்டி இருக்கிறோம். இது வெறும் அட்டைப்படம் மட்டுமே. இதில் கலையுணர்வு இருக்கிறது’’ என்றார். 

ஆதரவு

 அட்டைப்படத்திற்கு மாடலாக இருந்த தனுஷ்கா சுப்பிரமணியம் கூறுகையில், “ நான் இந்த அளவு அழகாக இருக்கிறேனா என்பது வியப்பாக இருக்கிறது. அதே சமயம், இந்தபடத்துக்கு எதிர்ப்புகள் வருவது அதிர்ச்சியாக இருக்கிறது'' என்றார்.