சிரியாவை முடக்கிய 'பவர் சென்டர்' யார்? மூக்குடைந்த ரஷ்யா!!

சிரியாவின் வறுமை, கிளர்ச்சியாளர்களின் எழுச்சி, ஆசாத்தின் வீழ்ச்சி, அவரது ஆடம்பர மாளிகையில் இருந்த கார்களின் மர்மம், சர்வதேச சக்திகளின் பங்கு ஆகியவற்றை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

Syria Al Assad fall Russia Iran lost in the war; What happens next?

சிரியா ஒன்றும் பணக்கார நாடு இல்லை. அந்த நாட்டில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே தான் இருக்கிறார்கள். அந்த நாட்டின் அதிபரும் விரட்டி அடிக்கப்பட்டார்.

சிரியா நாடு இன்று அல்ல, நேற்று அல்ல காலம் காலமாக பொருளாதார சிக்கலில் மட்டுமின்றி, ஆட்சி அதிகாரத்திலும் பெரிய மோதல்களை, சவால்களை சந்தித்து வருகிறது. சிரியாவின் அதிபராக இருந்த பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நீண்ட நாட்களாக கலவரத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது நாட்டை விட்டே விரட்டி அடிக்கப்பட்டு, ரஷ்யாவில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்.

ஆசாத் மாளிகை:
அவரது மாளிகைக்குள் புகுந்த இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெர்சிடஸ், பார்ஸ், ஆடி, ஃபெராரி போன்ற கார்களைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். இரண்டு, மூன்று கார்கள் இல்லை. கார் நிறுவனம் போன்று வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் ரிலீஸ் செய்தனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

எக்ஸ் தளத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு, அதற்கு நெட்டிசன்கள் பதில் அளித்து உள்ளனர். அந்தப் பதிவில், சுயநலம், அதிகாரம், ஊழல் ஆகியவை பீடத்தில் இருப்பவர்களை ஆட்டுவிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். இதற்கு என்ன நடவடிக்கை என்று மற்றொருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சிரியாவில் இஸ்லாமிய சன்னி கிளர்ச்சியாளர்கள்:
சிரியாவில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் கிளர்ச்சியால் 90% சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள் ஆசாத் வெளியேறி உள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசாத் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது மற்றும் சிரியாவின் நீண்ட கால உள்நாட்டுப் போருக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

சிரியாவில் ஆசாத் மாளிகை சூறையாடல்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிரியா கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாக செய்தி வெளியானது. ஆசாத் தப்பி ஓடிவிட்டார் என்று அறிவித்தனர். இது நாடு தழுவிய கொண்டாட்டங்களுக்கு வழிவகுத்தது மற்றும் அசாத்தின் ஆடம்பரமான மாளிகை சூறையாடப்பட்டது.

ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவு:
கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து சிரியாவில் பெரிய அளவில் கிளர்ச்சி நடந்து வந்தாலும், அதிபராக இருந்த ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவுக் கரம் நீட்டியது. இதனால், சில ஆண்டுகளுக்கு மட்டுமே, சிரியா மக்களையும் நாட்டையும் ஆசாத்தால் அமைதியாக வைத்திருக்க முடிந்தது. சமீபத்த்தில் நடந்து வந்த கிளர்ச்சியாளர்களின் கலவரம்  கட்டுக்கு அடங்காமல் சென்றது. ''பிரீ சிரியன் ஆர்மி'' களத்தில் இறங்கி அடித்தது. அலெப்போ நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த ஆண்டுகளில் இது கிளர்ச்சியாளர்களின் மிகப்பெரிய வெற்றி இது என்று கருதப்பட்டது.

கிளர்ச்சியாளர்கள் கையில் நான்கு நகரங்கள்:
இதைத் தொடர்ந்து நான்கு நகரங்கள் டாரா, குயுநெய்த்ரா, சுவேடா, ஹோம்ஸ் ஆகிய நகரங்களையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பிடித்தனர். இது மட்டுமின்றி கடந்த ஞாயிற்றுக் கிழமை சேநயா சிறையை உடைத்து கைதிகளை விடுவித்தனர். 

ஆசாத் குடும்பத்தின் கையில் சிரியா:
ஆசாத்துக்கு முன்பு அவரது தந்தை ஹபெஸ் அல் ஆசாத் சிரியாவை 24 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தார். இவருக்கு பின்னர் ஆசாத் அதிகாரத்திற்கு வந்தார். கிளர்ச்சிக்குப் பின்னர் தற்போது நாட்டை ஒப்படைத்து விடுவதாகவும், அரசு கட்டிடங்களை சேதம் செய்ய வேண்டாம் என்றும் பிரதமர் மொஹம்மத் ஜலால் கிளர்ச்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சிரியாவை இஸ்ரேல் தாக்கியதா?
டமாஸ்கஸிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு இஸ்ரேலின் துருப்புக்கள் நாட்டிற்குள் நுழைவதாக தகவல்கள் வெளியாகின. சிரியா முழுவதும் இஸ்ரேல் தொடர்ச்சியான கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும், சிரியாவின் தலைநகரை நோக்கி முன்னேறுவதை இஸ்ரேல் உறுதியாக மறுத்துள்ளது. ஆனால், டமாஸ்கஸ் நகருக்கு வெளியே வாழ்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டதாக செய்தியாளர்கள் ஆதாரத்துடன் செய்திகளை வெளியிட்டுள்ளனர். 

சிரியாவிற்குள் 400-சதுர-கிலோமீட்டர் தொலைவில் அதாவது ''பப்பர் சோன்'' என்று அழைக்கப்படும் இடத்தை இஸ்ரேல்  தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 1973 மத்திய கிழக்கு போருக்குப் பிறகு இந்த சோன் நிறுவப்பட்டது. இரு தரப்பும் இந்த இடத்தில் நுழையக் கூடாது என்ற சட்டம் உள்ளது. ஆனாலும், இஸ்ரேல் இந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. 

ஆசாத்துக்கு ஜெர்மன், பிரான்ஸ் எதிர்ப்பு: 
சிரியாவில் இருந்து ஆசாத் அரசை விரட்டுவதற்கு ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் உதவியது. இந்த நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு உதவினர். சிரியாவை விட்டு ஆசாத் தப்பி ஓடி இருப்பதை இந்த நாடுகள் வரவேற்றுள்ளன. சிரியா மக்களுக்கு தீமை விளைவித்து வந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முறுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று இந்த அரசுகள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிரியா மீது இஸ்ரேல் 300 தாக்குதல்களை நடத்தியதாக போர் கண்காணிப்பாளர் ஒருவர் இன்று (செவ்வாயன்று) தெரிவித்து இருக்கிறார். இந்த தாக்குதல்கள் நாட்டில் "மிக முக்கியமான ராணுவ தளங்களை அழித்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிரியாவில் அமெரிக்காவின் கை:
தெற்காசிய நாடுகளில் பதற்றம், போர் என்று வந்தால் அண்ணன் அமெரிக்கா இல்லாமல் இல்லை. ஈராக், லிபியா, சிரியா என்று அமெரிக்கா தனது  முத்திரைய அழுத்தமாக பதிவு செய்து வருகிறது. சிரியாவிலும் அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய சிரியாவில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்கப் படைகள் விமானப்படைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுகுறித்த தனது கருத்தில் ஆசாத்தின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இறுதியில் ஆசாத் ஆட்சி வீழ்ந்தது. இந்த ஆட்சி பல ஆயிரக்கணக்கான அப்பாவி சிரியர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றது. ஆட்சியின் வீழ்ச்சி என்பது நீதியின் அடிப்படைச் செயல். சிரியாவில் நீண்டகாலமாக துன்பப்படும் மக்கள் தங்கள் பெருமைமிக்க நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் ” என்று பைடன் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் தெரிவித்து இருந்தார். 

சிரியா - ஈரான் உறவு:
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானுக்கு ஷியா வகுப்பு ஆதரவு குறைந்துள்ளது. ஷியா பிரிவைச் சேர்ந்த ஆசாத்தின் வீழ்ச்சி ஈரானுக்கு மரண அடி கொடுத்துள்ளது. சன்னி பிரிவு கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளது. மேற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் வரை ஷியா பிரிவினர் பரந்து விரிந்துள்ளனர். மத்தியில் சிரியா இருந்து வந்தது. இது ஈரானுக்கு உதவியாக இருந்தது. 

ரஷ்யா, ஈரானுக்கு தோல்வி:
சிரியாவை தங்களது நட்பு நாடாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈரானும் கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்தது. இது மட்டுமில்லை, 2015 போரில் தோல்வியை நெருங்கிக் கொண்டு இருந்த அல் ஆசாத்தை காப்பாற்றியதும் ரஷ்யாதான். அப்போது சிரியா மண்ணில் கால்பதித்த ரஷ்யா, அங்கு ஏற்கனவே களத்தில் இறங்கி இருந்த அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. தற்போது சிரியா வீழ்ந்து இருப்பது ரஷ்யா, ஈரானுக்கு பலத்த அடி தான். 

ஈரான் அணு ஆயுதம்:
இனி ஈரானும் பெரிய அளவில் லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு உதவ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் - இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் பகிரங்கமாகவே உதவி வந்தது. இது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஈரான் தன்னை காப்பாற்றிக் கொள்ள அணு ஆயுத தயாரிப்பிலும் இறங்கலாம் என்று கூறப்படுகிறது. 

ரஷ்யாவுக்கு மூக்குடைப்பு:
ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளுக்கு முன்பு மூக்குடைத்துக் கொண்டுள்ளது. சிரியாவின் வீழ்ச்சி மேற்கத்திய நாடுகளின் வெற்றியாக கருதப்படுகிறது. உலக அளவில் தனது அரபு நட்புக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது ரஷ்யாவுக்கு ஒரு அவமானம்தான். ஆனாலும், சிரியாவின் சில பகுதிகளில் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ரஷ்யா தனது படைகளை விட்டு வைத்துள்ளது. 

துருக்கியும் ஐரோப்பிய நாடுகளும்:
சிரியாவின் வீழ்ச்சியால் துருக்கிக்கும் வெற்றி கிடைத்துள்ளது. இனி ஐரோப்பியாவை, வளைகுடா நாடுகளுடன் சிரியா வழியாக இணைக்க துருக்கிக்கு நல்ல சந்தர்ப்பம் அமைந்துள்ளது. இனி ஐரோப்பிய நாடுகளை இணைப்பதற்கு சிரியா நுழைவு வாயிலாக இருக்கும். ஆனால், சிரியா மக்களின் பிரச்சனைகள் களையப்படுமா? என்பது கேள்விக்குறியே.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios