Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலியாவில் உள்ள முருகன் கோயில் தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் - சீமான் கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு சமஸ்கிருத முறைப்படி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

sydney murugan temple kumbabishekam festival should be conducted in tamil language says seeman vel
Author
First Published Jan 20, 2024, 5:14 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “தமிழர்களின் வரலாற்று பெருங்கடவுள் தமிழர் இறை முருகனின் திருத்தலங்கள் தமிழகம் முழுமைக்கும் நிரம்பி இருக்கிறது. இதனைத் தாண்டி உலகெங்கும் பரவி வாழ்கின்ற தமிழர்கள், தங்கள் வசிப்பிடங்களில் தனது இனத்தின் அடையாள தெய்வமாக தமிழர் இறை முருகனுக்கு கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றார்கள். 

சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளில் முருகன் கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. அதைப்போலவே ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதி நகரமாக விளங்கும் சிட்னியிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். அப்பகுதியில் வாழ்கின்ற தமிழர்கள் ஒன்றாக இணைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட முருகன் சிலையை மூலவராக கொண்டு, 1999 ஆம் ஆண்டில் சிட்னி முருகன் கோயில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.  இந்த கோயிலை சிட்னி சைவ மன்றம் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் இராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடத்தில் அமர்ந்து கம்பராமாயண பாடல்களை நெகிழ்ச்சியுடன் கேட்ட மோடி

இந்நிலையில் இந்த கோயில் மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு வருகின்ற சனவரி 22, 2024 ஆம் தேதி குடமுழுக்கு செய்யப்படவிருக்கிறது. இந்த குடமுழுக்கு நிகழ்வானது முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தினால் செய்யப்பட இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் அங்கு இருக்கின்ற தமிழர்கள் ஒன்றுகூடி, குடமுழுக்கு நிகழ்வினை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்று ஒருமாதத்திற்கு முன்பாகவே கோரிக்கை வைத்து இருக்கின்றனர். அவர்களின் கோரிக்கை மீது இதுநாள் வரை கோயில் நிர்வாகம் எந்த பதிலும் கூறாமல் அவமதிப்பதோடு, சமஸ்கிருதத்தில் நடத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய மறுக்கும் கோயில் நிர்வாகத்தின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் கோரிக்கை

கோயில் நிர்வாகம் உடனடியாக தன்னுடைய எதேச்சதிகாரப் போக்கினை மாற்றிக்கொண்டு சிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு நிகழ்வினை தமிழ் மொழியிலும் நடத்தி தமிழர் இறை முருகனின் பெருமைகாத்திட கோருகிறேன். ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை வென்றுமுடிக்க வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios