ஹிட்லர் செய்யாததை செய்து காட்டிய புதின் - இரண்டாம் உலக போரில் தப்பித்தவரை கொன்ற ரஷ்யா..!
இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில் போரிஸ் ரோமன்சென்கோ ஹிட்லர் நடத்தி வந்த நான்கு வதை முகாம்களில் இருந்து தப்பி இருக்கிறார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 27 ஆவது நாளை எட்டியுள்ளது. உக்ரனை நகரங்களை குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பலக்கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும் பேச்சுவார்த்தைகள் எதிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதை அடுத்து ரஷ்யா நாளுக்கு நாள் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
உக்ரைன் நாட்டின் துறைமுக நகரங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய வதை முகாம்களில் இருந்து தப்பிய 96 வயதான முதியவர் ரஷ்யா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். உக்ரைன் நாட்டை சேர்ந்த ரோமன்சென்கோ கார்கிவ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த வாரம் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் போரிஸ் உயிரிழந்தார்.
இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில் போரிஸ் ரோமன்சென்கோ ஹிட்லர் நடத்தி வந்த நான்கு வதை முகாம்களில் இருந்து தப்பி இருக்கிறார். உக்ரைன் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் போரிஸ் ரோமன்சென்கோ உயிரிழப்பு பற்றி தகவல் வெளியிட்டு உள்ளார். "96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ நாஜி படைகள் நடத்திய புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டர்பாவ்டோரா, பெரர்களன்பெல்சன் என நான்கு வதை முகாம்களில் இருந்து தப்பித்தவர்."
"கார்கீவில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடந்த வெள்ளிக் கிழை அன்று ரஷ்ய ராணுவம் ஏவிய வெடிகுண்டு இவரின் வீட்டை தாக்கியது. இதில் இவர் உயிரிழந்தார். ஹிட்லரிடம் இருந்து உயிர் பிழைத்த இவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளார். ஹிட்லரால் முடியாததை புதின் செய்து காட்டி இருக்கிறார்," என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கார்கீவில் ரஷ்யா தொடர்ந்து கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரை புதின், "சிறப்பு ராணுவ ஆபரேஷன்" என்றே இன்று வரை குறிப்பிட்டு வருகிறார். போரிஸ் ரோமன்சென்கோ 1926 ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி பிறந்தார் என புச்சென்வால்டு மெமோரியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1942 ஆண்டில் இவர் டோர்ட்முண்ட் பகுதிக்கு மாற்றப்பட்டார்.
இங்கு இருந்து தப்பிக்க முயற்சித்து மாட்டிக் கொண்ட போரிஸ் ரோமன்சென்கோ 1943 ஆண்டு வாக்கில் புச்சென்வால்டு முகாமிற்கு மாற்றப்பட்டார். இரண்டாம் உலக போரின் போது இந்த முகாமில் தான் சுமார் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.