வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்டுள்ள கொடுமையான வறுமை, பஞ்சத்தால் உணவு கிடைக்காமல் நோயாலும், பட்டினியாலும் வனஉயிரியல் பூங்காவில் உள்ள அரிய ஆப்பிரிக்க சிங்கங்கள் கொஞ்சம், கொஞ்சமாக மரணத்தை தழுவி வருகின்றன. உருவத்திலும் பார்வையிலும் அனைவரையும் மிரட்டும் சிங்கங்கள் பரிதாபத்தின்  உச்சத்தில் இருக்கின்றன. காட்டில் வேட்டையாடி சுதந்திரமாக திரிய வேண்டிய சிங்கங்கள் நிலைமையைப் பார்த்த பலரும் தற்போது உதவி கோரி சமூக வலைதலங்களில் பகிர்ந்து வருகின்றனர். பலரும் சிங்கத்தை சுதந்திரமான சூழலில் விட்டுவிடுங்கள் என்று பூங்கா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

சூடான் தலைநகர் கார்டோம் நகரில் உள்ள அல்-குரேஷி வனஉயிரியல் பூங்காவில்தான் இந்த சிங்கங்கள் எலும்பும் தோலுமாக வற்றிப்போய் காட்சி அளிக்கின்றன. இந்த சிங்கங்கள் இருக்கும் நிலையில், ஒரு நாய்கூட சிங்கத்தை சாய்த்துவிடும் நிலையில் இருக்கின்றன. சிங்கத்தின் நிலைமையைப் பார்த்த ஓஸ்மான் சாலி என்பவர் பேஸ்புக் மூலம் சிங்கங்களின் புகைப்படங்களை பதிவிட்டு உதவி கேட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 

சூடான்அனிமல்ரெஸ்கியூ என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள சாலி தனது பதிவில் “ அல்-குரேஷி பூங்காவில் சிங்கங்களைப் பார்த்தவுடன் நான் அதிர்்ச்சி அடைந்துவி்ட்டேன். தோலுக்கு மேல் சிங்கங்களின் எலும்புகள் தெரிந்தன. அதனால் பசியோடும், நோயுடன் காணப்படும் சிங்கங்களுக்கு உதவ கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.கடந்த சில வாரங்களாக சிங்கங்களின் நிலைமை மோசமாகிவிட்டதாக பூங்கா அதிகாரிகள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். சிங்கங்கள் தங்கள் உடல் எடையில் மூன்றில் 2 பங்கு எடையை இழந்துவிட்டன.

பூங்காவின் மேலாளர் ஹஜ்ஜார் கூறுகையில் “ எப்போதும் சிங்கங்களுக்கு உணவு கிடைப்பதில்லை. ஆதலால் சிலநேரங்களில் எங்களின் கைப்பணத்தை செலவு செய்து உணவு வாங்கித் தருகிறோம்” எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் சிங்கத்தின் கூண்டில் அழுகிப்போன மாமிசத்தை சாப்பிட்டு சில சிங்கங்கள் உடல்நலக்குறைவில்லாமல் இருக்கின்றன என்று காப்பாளர்கள்தெரிவிக்கின்றனர்.ஆப்பிரிக்க சிங்கங்கள் மிகவும் அரிதானது என சர்வதேச இயற்கை காப்பாக அமைப்பு அறிவித்துள்ளது. 1993 முதல் 2014-ம் ஆண்டுக்கு இடையே ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை 43 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது 20ஆயிரம் சிங்கங்கள் மட்டுமே உயிரோடு வாழ்கின்றன.