சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளை ஆட்டிப் படைக்கிறது. உலகம் முழுவதும் 34 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆட்கொல்லி வைரஸால் 2 லட்சத்து 40 ஆயிரத்து 369 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 11 லட்சம் பேர் இந்த வைரஸின் கோரப்பிடியில் இருந்து தப்பித்து வீடு திரும்பியுள்ளனர். 

குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் அமீரகத்திலும் கொரோனா வைரஸ் தொற்றால் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருந்து 2 ஆயிரத்து 543 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீள ஸ்டெம் செல் சிகிச்சை முறை நல்ல பலன் கொடுக்கும் என்பதால் பல்வேறு நாடுகளும் அதை கடைபிடிக்க தொடங்கியுள்ளன. 

அதாவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு தனியாக வளர்க்கப்படுகின்றன. அவை கொரோனா நோய் தடுப்பு மருந்து போல் தயாரிக்கப்பட்டு, மீண்டும் யாரிடம் இருந்து எடுக்கப்பட்டதோ அவர்களிடமே புகை வடிவில் நுகரவைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நுண் திவலைகள் நோயாளியின் நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸ் பாதிப்பை சரிப்படுத்துகிறது. 

அபுதாபியில் இந்த சிகிச்சை முறையில் இதுவரை 73 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த சிகிச்சை முறையால் நோயாளிகள் குணமடைந்ததை அடுத்து காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னும் இரண்டே வாரங்களில் ஸ்டெம் செல் சிகிச்சை முறை மூலம் அமீரகம் முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.