கலைக்கப்பட்டதா இலங்கை நாடாளுமன்றம் ? இன்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது…
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா இன்று நள்ளிரவில் அதிரடியாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏஎஃப்பி றிறுவனம் இத்தகவலை அறிவித்துள்ளது.
இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26–ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரனில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். ஆனால் ரனில் விக்ரம சிங்கே, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார்.
இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்ந்து வந்தது. ரனில் விக்ரம சிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார்.
இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நாடாளுமன்றத்தை 16–ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.
இதையடுத்து நாடாளுமன்றம் 14–ந் தேதி கூடும் என சபாநாயகர் அறிவித்தார். அந்த நாளில் ஓட்டெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெறுபவர்தான் பிரதமராக தொடர முடியும் என்ற நிலை உருவானது.
ஆனால் வாக்கெடுப்பு நடத்தப்படடால் ராஜபசே கண்டிப்பாக தோற்றுவிடுவார் எனற நிலை உருவாகியிள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைக்கப் போவதாக கடந்த வாரமே தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்த சிறிசேனா கண்டிப்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படாது என தெரிவவித்திருந்தார்.
.இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த அதிபர் சிறிசேனா முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என ஏஎஃப்பி நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது.