Asianet News TamilAsianet News Tamil

முள்ளை முள்ளால் எடுத்த இலங்கை - காட்டிக் கொடுத்த கருணா மீது கைது நடவடிக்கை

srilanka karuna-arrest
Author
First Published Nov 30, 2016, 1:20 PM IST


முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், பிரபாகரனை காட்டி கொடுத்த கருணா, தங்களையும் அழிப்பார் என எண்ணி, தற்போது இலங்கை அரசு கைது செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1980ம் ஆண்டுகளில் புதுவரவு முரளிதரன் (எ) கருணாவின். துடிப்பான நடவடிக்கைகள், தலைமையின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படும் குணாதிசயங்களால் பிராபகரனின் முக்கிய தளபதிகளில் ஒருவராக முன்னேறினார்.

srilanka karuna-arrest

புலிகள் இயக்கத்தில் 2 பேர் மட்டுமே கையில் துப்பாக்கியுடன் பிரபாகரனை சந்திக்க முடியும். முதலில் பொட்டு அம்மான். அடுத்தவர் கருணா. தொடக்கத்தில் பிரபாகரனின் ஒட்டுமொத்த முக்கிய தளபதியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட கருணா, ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.

அதற்காக, “மட்டகளப்பு - அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கிய தென் தமிழீழத்தைச் சேர்ந்த புலிகள் இயக்க தோழர்கள் மதிக்கவில்லை. அவர்களின் உயிர் தியாகம் உதாசீனப்படுத்தப்படுகிறது. தென் தமிழீழ மக்களுக்காக போரிட்டு இவர்களின் மடியில் மடிவதையே எனது இறுதி லட்சியமாக கருதுகிறேன். இதில் எவரும் குறுக்கிடுவதை நான் விரும்பவில்லை” என்று பிரபாகரனுக்கே கடிதம் எழுதினார்.

இது தவிர, நிதி ஆளுமை சர்ச்சைகள், தனிப்பட்ட சொகுசு வாழ்க்கை என்றெல்லாம்கூட கருணாவுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் உண்டு. இப்படியான புகார்கள் வந்ததும் கருணாவுக்கும் தனக்குமான இடைவெளியை அதிகப்படுத்தி கொண்டார் பிரபாகரன். அதேசமயம், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், ‘தென் தமிழீழத்தின் ஏகோபித்த தளபதியாக வருவதற்காக கருணா, இலங்கை அரசுடன் கைகோர்த்துள்ளார் என்பதை அறிந்ததும் பிரபாகரன் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கருணாவுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. ஆனால், அதை நிராகரித்த கருணா, தென் தமிழீழ கோஷத்தை தூக்கிப் பிடிக்கும் விதமாக தலைமைக்கு கடிதம் எழுதுகிறார்.

கடிதத்தின் இறுதியில் ‘பிரபாகரனின் தலைமையில் செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். அவரை நாங்கள் கடவுள் என பாவிக்கிறோம்’ என்றெல்லாம் இருந்த வார்த்தைகள் பிரபாகரனை சாந்தப்படுத்தவில்லை.

06-03-2004-ல் கருணா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நபர்களின் நாட்கள் எண்ணப்படும் என்பதை நன்கு உணர்ந்த கருணா, தனது நிஜமுகத்தை காட்ட ஆரம்பித்தார்.

srilanka karuna-arrest

ரணில் விக்கிரமசிங்கே கட்சியின் எம்பியாக இருந்த இஸ்புல், கருணாவின் உறவுக்கார பெண் ஒருவரை மணம் முடித்தார். அந்த உறவு பாலத்தை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்கேயுடனும் அதை தொடர்ந்து சந்திரிகா, ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்களிடமும் விசுவாசம் காட்டிய கருணா, தனது நெருக்கத்தை அதிகப்படுத்தி கொண்டார்.

புலிகள் கூடாரத்தின் உள் முகத்துவாரம் வரையிலான விஷயங்களை அறிந்தவர் என்பதால் கருணாவை கைக்குள் வைத்து கொண்டு புலிகள் குறித்த ரகசியங்களையும், அவர்களின் அசைவுகளையும் தந்திரமாக அறிந்து கொண்டார் ராஜபக்சே.

இதற்கு அவர் அளித்த சன்மானம், தனது கட்சியின் உபதலைவர் பதவி, அமைச்சரவையில் துணை அமைச்சர் பதவி. புலிகள் இயக்கத்தை அடியோடு வீழ்த்திய முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பின்னணியில் ராஜபக்சேவின் ராஜதந்திரமும் கருணாவின் துரோகமும் போட்டிபோட்டு பங்காற்றியது.

அதேசமயம், முள்ளிவாய்க்கால் முடிவு வரும்வரை தனக்கு என்ன முடிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் கொழும்பிலேயே முடங்கிக் கிடந்தார் கருணா. “ஈழப் போரில் ஒருவேளை நாங்கள் தோல்வியுற்றால், அதற்கு காரணம் துரோகமாக இருக்கும் அல்லது இயற்கையாக இருக்கும்” என்று ஏற்கெனவே பிரகடனம் செய்தார் பிரபாகரன்.

srilanka karuna-arrest

அவர் சொன்னதுதான் நடந்தது. துரோகத்தை துருப்பாக வைத்து புலிகளை வீழ்த்திய இலங்கை அரசு, போதும் கருணாவின் சேவை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால்தான், அவர் தற்போது கைது செய்யப்பட்டார்.

கைதுக்கான காரணம் என ஒன்றை கூறினாலும், அவரை முடக்கி போடுவதற்கான வேறு சில ஆதாரங்களையும் இலங்கை அரசு துருவி கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில், வரலாறு திரும்பி இருக்கிறது. ஈழத்தில் மீண்டும் துரோகம் வென்றிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios