75 ஏக்கரில் தீவிரவாத பயிற்சி ! தோற்றுப் போன இலங்கை அரசு !!
கொழும்பு அருகே உள்ள வெல்லபட்டியில் வெடிபொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 75 ஏக்கர் பரப்பளவில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவநதுள்ளது.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து நடத்திய தாக்குதல் நடந்தது. இதில் 359 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் 10 வது முறையாக மீண்டும் குண்டு வெடித்தது. இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்யும் போது குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டாலும், உள்ளூர் தொடர்பும் இருக்கலாம் என போலீஸ் சந்தேகப்படுகிறது. அதே நேரத்தில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய நபர் தற்கொலைத் தாக்குதலில் பலியானதாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் விஜேவர்தனே தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கொழும்பு அருகே உள்ள வெல்லம்பிடியில் உள்ள ஆலையில் போலீஸ் நடத்திய சோதனையில் வெள்ளி தயாரிப்பு என்ற பெயரில் வெடிபொருட்கள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், வானாத்துவில்லு என்ற இடத்தில் போலீஸ் நடத்திய சோதனையில் தீவிர வாதிகளின் பட்டியல் சிக்கி உள்ளதாகவும் அங்குள்ள 75 ஏக்கர் தென்னந்தோப்பில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு மேல் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக வெளியான தகவலால் அதிர்ந்து போயுள்ள பொது மக்கள் , தற்போதுள்ள இலங்கை அரசு பாதுகாப்பு விஷயத்தில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.