அனைத்துக்கட்சி அமைச்சரவை அமைக்க கோத்தபய அழைப்பு... இலங்கை எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு!!
இலங்கையில் அனைத்துக்கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
இலங்கையில் அனைத்துக்கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அமைச்சர்கள் திடீரென ராஜினாமா செய்தனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பொதுமக்களின் கிளர்ச்சி வெடித்துள்ளதால் ஆட்சி அதிகாரத்தில் அனைத்து கட்சிகளும் பங்கெடுக்க வருமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து கட்சிகள் சார்பில் அமைச்சக பதவியை ஏற்று நெருக்கடியை தீர்க்க முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராஜபக்சே இடம்பெறும் அரசில் எந்த பொறுப்பையும் ஏற்கப் போவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜெ.பி. அறிவித்துள்ளது. அமைச்சரவை ராஜினாமா, அமைச்சரவையின் அழைப்பு திட்டமிட்ட நாடகம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா விமர்சனம் செய்திருக்கிறார்.
இசை நாற்காலி விளையாட்டு போல் அமைச்சரவையை மாற்றுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விமர்சித்திருக்கிறது. மக்கள் புறக்கணித்தவர்களையே மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கும் ராஜபக்சே அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையாது என்று இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவதே பிரச்சனைக்கு தீர்வாகும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. இதனிடையே இலங்கை முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்த போதும் மக்கள் போராட்டம் குறையவில்லை.
இதன் மூலம் அனைத்துக்கட்சி அமைச்சரவை அமைத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் கோத்தபய ராஜபக்சேவின் முயற்சியும் தோல்வியடைந்தது. கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பதே போராடும் மக்களின் கோரிக்கை என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருக்கிறார். ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் லண்டனில் போராட்டம் நடத்தி வருகின்றனர். லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு கூடி கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை தமிழர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.