இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை!
இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
கடனில் சிக்கியுள்ள இலங்கை நாட்டின் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை வரூகிற 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் விசா இல்லாமல் அந்நாட்டுக்கு செல்லலாம்.
இந்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கை போய் இறங்கியதும், கட்டணமின்றி சுற்றுலா விசாவை பெற்றுக் கொள்ளலாம். இலங்கையின் முதன்மையான சுற்றுலா சந்தையாக இந்தியா உள்ளது. செப்டம்பர் வருகையின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியர்கள் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் அதிக வருகைகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 8000 பயணிகளுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அதன்பிற்கு, இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அத்துடன், சுதந்திரம் பெற்றதில் இருந்து வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் அரசியல் அமைதியின்மையும் தொடர்கிறது. உணவு, மருந்து, சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக கடைகளுக்கு வெளியே பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் அந்நாட்டு மக்கள் உள்ளனர்.