இந்திய மருந்தால் உயிரிழப்புகள்? மறு ஆய்வு செய்யும் இலங்கை!
இந்திய மருந்துகளை பயன்படுத்தியதால் இலங்கையில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காம்பியா, உஸ்பெகிஸ்தானுக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் அண்டை நாடான இலங்கையில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு இந்திய தயாரிப்பான புபிவாகைன் என்ற மயக்க மருந்தை செலுத்தியதையடுத்து, அவர் கடந்த 16ஆம் தேதி உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், கர்ப்பிணி ஒருவருக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மயக்க மருந்து கொடுக்கப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போதைய உயிரிழப்பு அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னரே, பதிவு செய்யப்படாத சப்ளையர்களிடமிருந்து மருந்துகள் வாங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பானது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
குஜராத்தைச் சேர்ந்த Savorite Pharmaceuticals (Pvt) Limited மற்றும் சென்னையைச் சேர்ந்த Kausik Therapeutics ஆகியவை பிரதிவாதிகளாக அந்த மனுவில் சேர்க்கப்பட்டன. ஏப்ரல் மாத தொடக்கத்தில், உச்ச நீதிமன்றம் வழக்கைத் தொடர அனுமதி வழங்கியதுடன், இந்த நிறுவனங்களிடமிருந்தான இறக்குமதியையும் நிறுத்தி வைத்தது.
அதன் தொடர்ச்சியாக, மத்திய மாகாணமான நுவரெலியாவில் உள்ள பொது மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்திய மருந்துகள் வழங்கப்பட்ட 10 நோயாளிகளுக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த மருந்து மேலும் பயன்படுத்தப்படாமல் இருக்க அதனை திரும்பப் பெற்றனர்.
இதுபோன்ற தொடர் சம்பவங்களால், இந்திய மருந்துகள் இலங்கையில் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்களை பயன்படுத்தியதால் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானின் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் சிலர், இலங்கையின் மருந்து கொள்முதல் கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீன - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஏழரை மணிநேரம் சந்திப்பு!
இலங்கை மருத்துவமனையில் கடந்த வாரம் பதிவான மரணம், இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரம் மற்றும் இலங்கையின் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளரின் பொறுப்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, இலங்கையில் பயன்படுத்தப்படும் இரண்டு மருந்துகளின் தரத்தை மறு ஆய்வு செய்ய அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இலங்கை சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, மருந்துகளை பயன்படுத்தியதால் நோயாளிகள் இறந்ததாகவும், பலருக்கு சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள இரண்டு மருந்துகளும் இந்தியாவின் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் இரண்டு மருந்துகளும் பதிவு செய்துள்ளதால், இலங்கையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் தலைமையில் சிறப்புக் குழுவை சுகாதார அமைச்சகம் அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வின்யா ஆரியரத்ன கூறுகையில், ஒருபுறம் தொடர்ச்சியான மருந்து தட்டுப்பாடு, மற்றொருபுறம் மருந்துகளின் தரம் தொடர்பான கவலை என இரண்டு பெரிய நெருக்கடிகளை இலங்கை சுகாதாரத் துறை எதிர்கொள்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இந்திய மருந்துப் பொருட்களை பல ஆண்டுகளாக இலங்கை உபயோகித்து வருகிறது. இலங்கையின் மருந்து தேவையை பூர்த்தி செய்யும் நாடுகளில் முதன்மையாக இந்தியா இருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் மருந்து இறக்குமதி மொத்தமாக 450 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதில் பாதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. கடந்த ஆண்டு இலங்கையின் வரலாறு கான பொருளாதார வீழ்ச்சி காரணமாக மருந்துகள் உட்பட பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இருப்பினும், இந்தியாவில் இருந்து அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை இலங்கை தொடர்ந்து வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.