sri lanka crisis: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவியதா?
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்வதற்கு இந்திய அரசு உதவியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்வதற்கு இந்திய அரசு உதவியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இலங்கைப் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு செல்லக் காரணமாக இருந்த ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சியிலிருந்து அகலக் கோரி கடந்த 3 மாதங்களாக மக்கள் தொடர்ந்து தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள்.
இலங்கையின் பொருளாதாரம் அழிவு நிலைக்குச் சென்று, உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகளை சாமானிய மக்கள் வாங்க முடியாத நிலைக்கு உயர்ந்துவிட்டது. இதையடுத்து, மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் விலகினார்.
ஆனால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச மட்டும் பதவிவிலகவில்லை. கடந்த 9ம் தேதி முதல் இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது, அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்ச விலகக் கோரி மக்கள் கொந்தளிப்புடன் போராடி வருகிறார்கள்.
கடந்த 9ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, மக்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றி உள்ளே சென்றனர். ஆனால், மக்கள் போராட்டம் தீவிரமடையும் எனத்த தெரிந்து முந்தையநாள் இரவே கோத்தபய ராஜபக்ச, ராணுவ தலைமை அலுவலகத்துக்கு தப்பினார்.
இலங்கையிலிருந்து ராஜபக்ச குடும்பத்தினர் கடல்மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களை கடற்படையினர், பாதுகாவலர்கள், மக்கள் தடுத்தனர்.
இந்நிலையில் இலங்கை முழுவதும் போராட்டம் தீவிரமடைந்ததைப் பார்த்த கோத்தபய ராஜபக்ட புதன்கிழமை(இன்று) அதிபர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். ஆனால், திடீரென அதிபர் கோத்தபய ராஜபக்ச தனி விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.
கோத்தப ராஜபக்ச அவரின் மனைவி, இரு பாதுகாவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தபின் இலங்கை ராணுவ விமானத்தில் மாலத்தீவு சென்றனர் என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. ஆனால் மாலத்தீவுக்கு கோத்தபய ராஜபக்ச வந்துள்ளது குறித்து மாலத்தீவு அரசு சார்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை
இலங்கையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல தேவையான உதவிகளை இந்தியா வழங்கியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சில ஊடகங்களில் வெளியான இந்த செய்திக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் “ இலங்கையிலிருந்து கோத்தபய ராஜபக்ச வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக சில ஊடகங்கள் வெளியிடும் செய்தியை, இந்தியத் தூதரகம் மறுக்கிறது, அடிப்படை ஆதாரமற்ற தகவல். ஜனநாயக முறையில் இலங்கை மக்கள் தங்கள் மதிப்புகளையும், வளர்ச்சிக்கான ஆசைகளையும், உணர விரும்புகிறார்கள் அதற்கு இலங்கை மக்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும்” எனத் தெரிவித்துள்ளது.