மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயத்தில் தாக்குதல்..? நியூசிலாந்து சம்பவத்துக்கு இலங்கையில் பழிக்குபழி..!
கடந்த மாதம் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயங்கள் மீது தீவிரவாதிகள் இந்த கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி உள்ளதாக இலங்கை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயங்கள் மீது தீவிரவாதிகள் இந்த கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி உள்ளதாக இலங்கை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் உள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாற்று மதத்தினர் குடியேற்றத்தை கண்டித்து முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பிடிபட்டவர் தெரிவித்தார். இந்த சம்பவம் பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த தீவிரவாத தாக்குதலில், ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 310-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவசர நிலையையும் அறிவித்தார் அதிபர் சிறிசேன. நாடு தழுவிய துக்கமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர் குண்டு வெடிப்புத் தொடர்பாக, மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக் கேட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியம் செய்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்குதல் தொடர்பாக விளக்கமளித்துள்ள அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ருவன் விஜேவர்தனே ‘நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.