இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை செல்லும் தங்கள் நாட்டினர் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறியுள்ளது. 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 9 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவசரநிலை பிரகடனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்நிலையில் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கையில், தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்தோ அல்லது விடுக்காமலோ மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும். சுற்றுலா தலங்கள், போக்குவரத்து வாகனங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள், ஓட்டல்கள், கிளப்புகள், உணவு விடுதிகள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

 

மேலும் இலங்கைக்கு செல்லும் அமெரிக்கர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.