ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகம் அருகே நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் விரைவில் அதிபர் பதவி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் சிறப்பு முகாம்கள் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மரோப் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தை குறிவைத்து தற்கொலைப்படையினர் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 19 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
முன்னதாக பாக்லான் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட 25 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, தலிபான்களுடன் அமெரிக்கா 7-வது கட்டப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற அடுத்தடுத்த தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.