அடுத்த 15 நாட்கள்.. இடியுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு - சிங்கப்பூரர்களை எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!
Singapore Weather Update : சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதியை சில்லென்ற காற்றோடு அனுபவித்து வரும் சிங்கப்பூரர்களுக்கு, கனமழை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம்.
தற்போது சிங்கப்பூரில் நிலவி வரும் ஈரமான வானிலை, டிசம்பர் 2023ன் முதல் பதினைந்து நாட்களில் தொடரும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் நேற்று டிசம்பர் 1ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15 நாட்களுக்கு தீவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.
மேலும் வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி மதியம் துவங்கும் மழை, ஒரு சில நாட்களில், இரவு வரை நீடிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 2023ன் முதல் பாதியில் மொத்த மழைப்பொழிவு சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2023 முதல் பாதியில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், தினசரி அதிகபட்ச வெப்பநிலை சில நாட்களில் 34 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பெரும்பாலான நாட்களில், தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2023ன் இரண்டாவது பதினைந்து நாட்களில், பெரும்பாலான நாட்களில் மதியம் தீவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சில நாட்களில், மழை இரவு வரை நீடித்தது. குறிப்பாக, நவம்பர் 21 அன்று, சிங்கப்பூரின் பல பகுதிகளில் பிற்பகலில் பரவலாக மிதமானது முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
COP28 | "நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே"- சத்குரு சிறப்புரை!
பெடோக்கில் பதிவான 128.8 மிமீ தினசரி மொத்த மழைப்பொழிவு மாதத்தின் இரண்டாம் பாதியில் பதிவான அதிகபட்ச மழையாகும். இருப்பினும், நவம்பர் 2023ன் இரண்டாம் பாதி பொதுவாக சூடாக இருந்தது, பெரும்பாலான நாட்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. நவம்பர் 17, 2023 அன்று கிளமென்டியில் அதிகபட்ச தினசரி அதிகபட்ச வெப்பநிலையான 35.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.