கிம் ஜாங் உன்னுடன் செல்பி எடுக்க சிங்கப்பூர் மக்கள் காட்டிய ஆர்வம்…
அமெர்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு வார்த்தை நடத்துவதற்காக சிங்கப்பூர் வந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அமைச்சர் உட்பட அந்நாட்டு பொது மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பொருளாதார தடைகளுக்கு இடையேயும் அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் வட கொரியா தீவிர ஆர்வம் காட்டி வந்தது. இது அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றது முதல், அவருக்கும் வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே கடுமையான வார்த்தை யுத்தம் நடந்து வந்தது.
இந்த நிலையில்தான் சற்றும் எதிர்பாராத வகையில் தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் முயற்சியால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை உச்சி மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்து பேச தயார் என டிரம்ப் முன் வந்தார். இது உலக அரங்கை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பல அதிரடி திருப்பங்களுக்கும், மாற்றங்களுக்கும் பிறகு, ஒருவழியாக இவ்விரு தலைவர்கள் சந்தித்து பேசும் உச்சி மாநாடு இன்று 9 மணிக்கு சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து. முதல் சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றன. தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவாத்த்தையும் நடந்தது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த உச்சி மாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடுகளை அமெரிக்கா, வடகொரியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளும் இணைந்து செய்திருந்தன. இதற்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன..
இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். சிங்கப்பூர் வந்திருந்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் அங்குள்ள முக்கிய சுற்றுலா தளங்களை இரவில் சுற்றிப் பார்த்தார்.
மெரினா பே என்ற பகுதிக்கு வந்திருந்த கிம் ஜாங் உன்னை பொதுமக்கள் ஆர்வமுடன் சந்தித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் இஸ்பலாண்டே என்ற பகுதிக்கு சென்ற கிம் ஜாங்கை அதிகாரிகள் வரவேற்றதுடன் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிம் ஜாங் உன்னுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.