சீக்கிய மத தலைவரின் மகளை கடத்தி மதம் மாற்றி திருமணம்... பாகிஸ்தானில் அட்டூழியம்..!
பாகிஸ்தானில் சீக்கிய மதப்பெண்ணை கடத்தி முஸ்லீம் மதத்திற்கு மாற்றியதால் அவரது பெற்றோர் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் சீக்கிய மதப்பெண்ணை கடத்தி முஸ்லீம் மதத்திற்கு மாற்றியதால் அவரது பெற்றோர் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர், நங்கனா சாகிப் பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாகவும், பின்னர் இஸ்லாமியர் ஒருவருக்கு அவரை திருமணம் செய்து வைத்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடும் வேதனை அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை விடுதலை செய்யாவிட்டால் பஞ்சாப் கவர்னரின் இல்லத்தின் முன்பு தீக்குளிக்கப் போவதாக கூறி உள்ளனர்.
தங்கள் வீட்டு பெண் விடுவிக்கப்பட்டு பத்திரமாக வீடு திரும்ப தங்களுக்கு உதவும்படி இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆகியோர் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி அந்த கும்பல் தங்களை மிரட்டுவதாகவும் சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த சம்பவம் பாகிஸ்தானின் சிறுபான்மையின இனமான சீக்கியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவரும், ஷிரோமணி அகால தளம் எம்எல்ஏவுமான மஞ்சிந்தர் சிங் சிர்சாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் சிர்சா கூறியுள்ளார்.