ஹாங்காங்கில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த பிரபல நடனக்குழுவை சேர்ந்த இளைஞர் மீது ராட்சத திரை விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் மிகவும் பிரபலமான கேண்டபாப் மிரர் என்கிற நடனக்குழுவினர், ஹாங்காங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியை பார்க்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில், கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அந்த அரங்கில் இருந்த பிரம்மாண்ட வீடியோ ஸ்கிரீன் அறுந்து விழுந்தது.

இதில் நடனமாடிக் கொண்டிருந்த கேண்டபாப் மிரர் நடனக்குழுவை சேர்ந்த இருவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கும் மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பிரம்மாண்ட ஸ்கிரீன் அறுந்து நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது விழுந்த பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்... எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா அதுக்கு அவர் தான் பொறுப்பு - ரஜினி பட வில்லன் மீது விஷால் பட நடிகை பரபரப்பு புகார்

Scroll to load tweet…

இந்த விபத்தின் காரணமாக கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர் அடுத்ததாக கலந்துகொள்ள இருந்த 12 நடன நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஹாங்காங் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேபிள் அறுந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரம்மாண்ட ஸ்கிரீன் அறுந்து விழும் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர், தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றதன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இவர்களுக்கென சீனாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மும்பையில் போனிகபூர் பட ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட்டில் தீ விபத்து - ஒருவர் உடல் கருகி பலி