கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டால் ஒரு டோஸ் மட்டுமே போதுமானதாக இருக்காது என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு இரண்டு டோஸ் அளவு மருந்து தேவைப்படும் எனவும், இது மிகப்பெரிய சவால் நிறைந்த காரியம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, 200க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலக அளவில் 2.54 கோடி பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 8.50 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 1.77 கோடி பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 67 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 776 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். சுமார் 34 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து மீட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் அது கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. பிரத்யேக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்பதால், ஒட்டுமொத்த உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்நிலையில் ரஷ்யா, தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. அதேபோல் சீனாவும் தங்கள் நாட்டில் தடுப்பூசி தயாராக இருக்கிறது என்றும், அதற்கான விலையையும் வெளியிட்டுள்ளது. 

அதற்கு அடுத்த நிலையில் இந்தியாவும் தடுப்பூசியை அறிவிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அமெரிக்க ஆராய்ச்சி நிபுணர்கள் முக்கிய கருத்து ஒன்று வெளியிட்டுள்ளனர். அதாவது கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கப்பட்டாலும், ஒரு டோஸ் மட்டுமே போதாது, நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ் அளவு மருந்து தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இது மிகப்பெரிய சவால் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக வைரஸ் தொற்றுக்கு பின்னர் பிபிஇ கிட் எனப்படும் முழு கவச உடைகள், கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், தடுப்பூசியை  இரட்டிப்பாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பது சவாலான பணியாகும்.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள, டென்னசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் சுகாதார கொள்கை பேராசிரியர் டாக்டர் கெல்லி மூர் இது மனித வரலாற்றில் மிகக் கடினமான தடுப்பூசி திட்டமாக இருக்கும் என்றார்,  தடுப்பூசியை அமெரிக்காவில் சந்தைக்கு கொண்டு வருவதற்கான ஆப்பரேஷன்  வார்ப் ஸ்பீடு நடந்து வருகிறது இதன் கீழ் 6 மருந்து நிறுவனங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. 

 

இவற்றில் இரண்டு நிறுவனங்கள்  மாடர்னா மற்றும் ஃபைசரின் தடுப்பூசிகள் -3 வது கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இரு நிறுவனங்களும் 30,000 நபர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் கொடுக்கப்படுகின்றன. முதல் டோஸ் கொடுக்கப்பட்ட  28 நாட்களுக்குப் பிறகு, ஃபைசர் இரண்டாவது டோஸ் கொடுக்கப்படுகிறது. எனவே கொரோனா நோயாளிகளுக்கு ஒரு டோஸ் மட்டுமே போதுமானதாக இருக்காது என  இந்த தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.