சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் ஒரு கோடியே 34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளையே கடுமையாக அச்சுறுத்தியது கொரோனா. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே கொரோனா விவகாரத்தில், உலகளவில், வருமுன் காப்பதே சிறந்தது என்பதற்கேற்ப, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தான் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன. 

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் கொரோனா பரவலை தடுக்கவும் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. இந்த மூன்றும்தான் கொரோனா தடுப்பு பிரதான நடவடிக்கைகளாக உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது. கொரோனாவிலிருந்து உலக நாடுகள் முழுமையாக மீண்டாலும், மாஸ்க், தனிமனித இடைவெளி ஆகிய விஷயங்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்படும். 

இந்நிலையில், மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் அறிவியல்  ரீதியாக எந்த பயனும் இல்லையென தெரிவித்துள்ள தமிழகத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் விஞ்ஞானியான சிவா அய்யாதுரை, இந்த நடவடிக்கைகள் அறிவியல் ரீதியாக என்ன பயனளிக்கும் என்பதையும், பொதுச்சுகாதாரத்தில் எந்தவிதமான முன்னேற்றத்திற்கு உதவும் என்பதையும் தன்னுடன் விவாதிக்க அமெரிக்க சுகாதார அதிகாரிக்கு நேரடி சவால் விடுத்துள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி சிவா அய்யாதுரை, ஈமெயிலை கண்டுபிடித்தவர். அதன்பின்னர் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் பல்லாண்டுகளாக சிறந்த விஞ்ஞானியாக, தொடர்ச்சியாக அறிவியல் களத்தில் செயல்பட்டுவருகிறார் சிவா அய்யாதுரை. 

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் தடுப்பு கழக இயக்குநரும், அமெரிக்காவின் கொரோனா தடுப்பு அதிகாரியுமாக இருப்பவர் அந்தோனி ஃபாசி. அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முக்கிய பொறுப்பில் உள்ள ஃபாசியைத்தான் சிவா அய்யாதுரை தன்னுடன் விவாதிக்க அழைத்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஞ்ஞானி சிவா அய்யாதுரை, மாஸ்க், தனிமனித இடைவெளி, ஊரடங்கு ஆகியவற்றின் அறிவியல் நன்மைகளையும் அவசியத்தையும், பொதுச்சுகாதாரத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் பொதுவெளியில் விவாதிக்க அந்தோனி ஃபாசிக்கு அழைப்பு விடுத்து டுவீட் செய்துள்ள சிவா அய்யாதுரை, இடம் மற்றும் தேதியையும் பதிவிட்டுள்ளார். 

 

மேலும், நானே விமானத்தில் முதல் வகுப்பில் டிக்கெட் புக் செய்து தருகிறேன். தங்கும் வசதிக்கான ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன் என்றும் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார்.