சீனாவில் 12 நாட்கள் ஒரே இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வட்டமாக சுற்றி வந்த செம்மறி ஆடுகள்; என்ன காரணம்?
சீனாவின் மங்கோலியா பகுதியில் செம்மறி ஆடுகள் தொடர்ந்து 12 நாட்களாக ஒரே இடத்தில் வட்டமாக ஒன்றன் பின் ஒன்றாக சுற்றி வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. சீன அரசின் பீபிள் டெய்லி இதுதொடர்பான வீடியோவை டுவிட்டரில் பதிவு செய்து இருந்தது.
இதையடுத்து எதற்காக செம்மறி ஆடுகள் ஒரே இடத்தில் சுற்றி இருக்கும் என்று பலரும் ஆச்சரியத்துடன் பேசி வந்தனர். இதுகுறித்து அறிவியல் வல்லுனர்களும் தங்களது கருத்தை கூறத் தொடங்கி விட்டனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹார்ட்புரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவசாயத்துறை பேராசிரியர் மாட் பெல், ''ஒரே இடத்தில் நீண்ட நாட்களுக்கு அடைத்து வைத்து இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால், செம்மறி ஆடுகள் அனைத்தும் ஒரே மாதிரியான பழக்கத்தை தொடர்ந்துள்ளன. ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படும்போது மனதளவில் அவை பாதிக்கப்படுகின்றன. இதனால், செம்மறி ஆடுகள் தங்களுடைய போக்கை அவ்வாறு மாற்றிக் கொண்டுள்ளன. செம்மறி ஆடுகள் மந்தை விலங்குகளாக இருப்பதால், உடன் இருக்கும் செம்மறி ஆடுகளுடன் நட்பு கொள்கின்றன அல்லது இணைகின்றன என்று கூறலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மெர்க் கால்நடை மருத்துவக் கையேடு, ''செம்மறி ஆடுகளின் சமூக நடத்தை, மனநிலை என்பது மந்தநிலை கொண்டது. அதனால் அவை ஆபத்தை உணர்ந்தவுடன் தங்களை பாதுகாத்துக் கொள்ள குழுவாக ஒருவரையொருவர் பின்பற்றுகின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் செம்மறி ஆடுகள் வட்டமாக நகர்ந்ததாக நியூஸ் வீக் செய்தி வெளியிட்டு இருந்தது. அப்போது பண்ணையின் உரிமையாளர் ஒரு சில செம்மறி ஆடுகள் மட்டுமே அவ்வாறு வட்டமடித்து வந்ததை பார்த்துள்ளார். பின்னர் அனைத்து செம்மறி ஆடுகளும் இணைந்து பெரிய வட்டமாக சுற்றி வந்துள்ளன.
முதலையிடம் சிக்கிய நபர்… பிறகு என்ன ஆனது? அதிர்ச்சியூட்டும் வீடியோ!!
சில விஞ்ஞானிகள் லிஸ்டெரியோசிஸாக இருக்கலாம் என்று ஊகித்துள்ளனர். இது ஒரு பாக்டீரியாவால் ஏற்படும் நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் பொதுவாக சுகாதாரமற்ற உணவுகள், மண் மற்றும் விலங்குகளின் மலம் மூலம் பரவுகிறது என்று தெரிவித்துள்ளனர். நாளடையில் இதனால் விலங்குகளுக்கு மரணம் ஏற்படலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வகை பாக்டீரியா மூளை நரம்புகளை சேதப்படுத்தும். இதன் விளைவாக முக முடக்கம், தலை சாய்வது, உணர்வு இழப்பு மற்றும் மனச்சோர்வு ஏற்படும் என்று கூறியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இந்த வகை நோய் கடுமையான வெப்பம் மற்றும் குளிர்ந்த காலங்களில் ஏற்படுகின்றன என்று மருத்துவ இதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ராணுவ தளபதியாக அசிம் முனீர் தேர்வு; இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?