Asianet News TamilAsianet News Tamil

இலங்கை வரும் சீன உளவுக் கப்பல்; இந்தியாவுக்கு பீஜிங் அளித்த சீற்றமான பதில்!!

''இந்தியாவின் எதிர்ப்பு புத்திசாலித்தனம் இல்லாதது. இலங்கை, சீனா இடையே நடக்கவிருக்கும் சாதாரண பகிர்வுகளை தடுக்க வேண்டாம்'' என்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் வருவது குறித்து இந்தியாவுக்கு சீனா பதில் அளித்துள்ளது.

Senseless pressure to Sri Lanka says China on Yuan wang 5 ship moving to Hambantota
Author
First Published Aug 9, 2022, 2:08 PM IST

சீனாவில் இருந்து செயகைக்கோள் வசதிகள் கொண்ட வேவு பார்க்கும் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வருகிறது. இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இலங்கை அரசையும் கண்டித்துள்ளது. இலங்கையும் கப்பல் பயணத்தை ஒத்தி வைக்குமாறு சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனாலும், சீன கப்பல் பயணத்தை தொடர்ந்து கொண்டுள்ளது.

சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவுக் கப்பல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இது இலங்கை, இந்தியா இடையே பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கப்பல் செயற்கைக்கோள் மூலம் வேவு பார்க்கும் திறன் கொண்டது.

அதாவது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இந்தக் கப்பலால் 750 கிலோ மீட்டர் தொலைவு வரை வேவு பார்க்க முடியும். தமிழ்நாட்டின் கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் இந்திய எல்லையில் இருக்கும் அணு ஆயுதக் கூடங்களை வேவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளை நோட்டமிட முடியும். தகவல்களையும் இதனால் சேகரித்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இதுதான் இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வரும் சீன கப்பல்; தமிழ்நாட்டை வேவு பார்க்கிறதா? பதறும் இலங்கை!!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு நிறுத்தப்படுகிறது என்று சீனா கூறினாலும் இதை நம்புவதற்கு இந்தியா தயாராக இல்லை. கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசிடம் இந்தியா எச்சரிக்கை விடுத்து இருந்தது. 

இந்த நிலையில் நேற்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் அளித்திருக்கும் பதிலில், ''இந்தியாவின் வேண்டுகோள் புத்திசாலித்தனம் இல்லாதது. சரியான அறிக்கை இந்தியாவிடம் இருந்து வெளியாகவில்லை. இந்தியப் பெருங்கடலில் இலங்கை முக்கிய போக்குவரத்து புள்ளியாக திகழ்கிறது. சீனா உள்பட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் விநியோகத்திற்காக நிறுத்தப்படுகிறது. கடல் எல்லைப் பரப்பை எப்போதும் சீனா மதிக்கிறது.  

sri lanka crisis: இலங்கை பொருளாதார சிக்கல் இன்னும் ஓர் ஆண்டு நீடிக்கும்: அதிபர் விக்ரமசிங்கே குமுறல்

இலங்கை இறையாண்மை கொண்ட நாடு. சொந்த நலனுக்காக மற்ற நாடுகளுடன் தனது உறவை இலங்கை வளர்த்துக் கொண்டுள்ளது. இலங்கை, சீனாவின் ஒத்துழைப்பு என்பது இந்த இரண்டு நாடுகளும் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்து கொண்டது. ஆனால், இந்த ஒத்துழைப்பு என்பது மூன்றாம் தரப்பினரை குறிவைப்பதற்காக இல்லை. பாதுகாப்பு என்ற பெயரில் இலங்கை அரசை துன்புறுத்துவது  புத்திசாலித்தனமானதாக இருக்காது.

சீனாவின் அறிவியல் ஆய்வு மற்றும் காரணங்களை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க வேண்டும். இலங்கை, சீனா இடையிலான பரிமாற்றங்களுக்கு காரணங்கள் கண்டறிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள இலங்கையின் மூன்று தீவுகளில் எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்காக சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு சீனா அனுமதி அளித்து இருந்தது. எரிசக்தி அமைப்பும் நிறுவப்பட்டது. இதை இந்தியா பகிரங்கமாக கண்டித்து இருந்தது. அப்போதும் இதேபோல், மூன்றாம் நபர் தலையீட்டை விரும்பவில்லை என்று சீனா தெரிவித்து இருந்தது. 

சீனாவிடம் ஏற்கனவே பெரிய கடன் பெற்று இருக்கும் இலங்கை தற்போது 4 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் கேட்டுள்ளது. ஆனால், கடன் கொடுப்பது குறித்து இதுவரைக்கும் சீனா வாய் திறக்கவில்லை. இந்த நிலையில்தான் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேவு கப்பலை நிறுத்துவதற்கு சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டமைப்பதற்கும் சீனாவிடம் இலங்கை கடன் வாங்கி இருந்தது. இந்தக் கடனை அடைக்க முடியாமல், துறைமுகத்தை இறுதியில் சீனாவிடம் குத்தகைக்கு இலங்கை ஒப்படைத்தது. தற்போது இந்த துறைமுகத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது. 

ஆனால், இந்தியா எந்த பலனையும் எதிர்பார்க்காமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடந்த ஜனவரி மாதத்தில் 3.5 பில்லியன் டாலர் உதவி வழங்கியுள்ளது. ஆனால், இதே கால கட்டத்தில் சீனா வெறும் 74 மில்லியன் டாலர் உதவி மட்டுமே வழங்கியுள்ளது. சீனாவின் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வரலாம் என்ற அனுமதியை சீனாவுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி இலங்கை அரசு வழங்கி இருந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios