பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்பிக்கள் புகழாரம்; சபாநாயகர் முதல் யார் யார் என்ன கூறினார்கள் இதோ!!
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பிரதமர் மோடி பேசி இருந்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பலத்த ஆரவாரம் கிடைத்தது. அவரது பேச்சுக்களை ஒவ்வொரு இடத்திலும் ரசித்துக் கேட்ட எம்பிக்கள் கட்சி வேறுபாடின்றி கை தட்டி மோடி மோடி என்று கோஷம் எழுப்பினர். அவர் முக்கியமாக தீவிரவாதம், இந்தியாவில் முஸ்லிம்களுக்கான ஜனநாயக உரிமை, வர்த்தகக் கூட்டு, இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள், மொழிகள் குறித்து பேசி இருந்தார்.
''இந்தியாவில் ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குகள் உள்ளன. ஆனாலும், நாங்கள் அனைவரும் ஒரே குரலில் பேசுகிறோம்'' என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பெரிய அளவில் கைதட்டல் அவையில் எதிரொலித்தது.
இன்று காங்கிரஸ் அவையில் இந்தியப் பிரதமர் ஆற்றிய கூட்டு உரையில் கலந்துகொண்டேன். உலகளவில் அமைதி மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டில் நமது பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் அமெரிக்க-இந்திய கூட்டாண்மை முக்கியமானது என்று கிரேக் ஸ்டான்டான் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடியின் பயணம் ஒரு முக்கிய வாய்ப்பாகும். அமெரிக்கா, இந்தியா பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும், நமது கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான முக்கியமான நேரம் தற்போது கிடைத்தது போல் எப்போது கிடைத்தது இல்லை என்று எம்பி மார்க் வார்னர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு எம்பிக்களும் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு மோடிக்கு வாழ்த்தும், அவரது பேச்சை பாராட்டியும் வருகின்றனர். எம்பி கோலின் ஆல்ரெட் தனது பதிவில், ''உலகளவில் எழுந்து இருக்கும் சவால்களை சந்திக்க ஜனநாயக நாடுகள் அனைத்தும் கைகோர்க்க வேண்டும். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பொருளாதார மற்றும் அலுவல் ரீதியான ஒத்துழைப்பு வலுப்பெறும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் மூலம் பயறு வகை பயிர்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்ற எனது அழைப்புகளுக்குப் பிறகு, வர்த்தகத் தடைகளைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். MT விவசாயிகளுக்கும் நமது நட்பு நாடான இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவுக்கும் இது ஒரு சிறந்த செய்தி என்று எம்பி ஸ்டீவ் டைனஸ் பதிவிட்டுள்ளார்.
எனது நண்பரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்ததில் சந்தோசம் அடைகிறேன் என்று எம்பி பிரைன் பிட்ஸ்பட்ரிக் குறிப்பிட்டுள்ளார்.
நமது இரு நாடுகளுக்கிடையேயான கலாச்சார, பொருளாதார மற்றும் மனிதாபிமான பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான நமது பணியைத் தொடரும் வேளையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பிரதிநிதிகள் சபைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று எம்பி ஜிம்மி பனேட்டா பதிவிட்டுள்ளார்.
பிரதமரை வரவேற்பது ஒரு பாக்கியமாக கருதுகிறேன். உலகின் ஜனநாயகத்தின் மிகப்பெரிய சின்னங்களில் ஒன்றான அமெரிக்க தலைநகருக்கு இன்று வந்துள்ளார் பிரதமர் மோடி. நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு உறவுகளை அதிகரிக்க நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.